ஈரோடு மாவட்டம் சிவகிரி தலையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் வயது 75. டிவி மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பத்மினி.இவர்களுக்கு இரண்டு மகன் உள்ள நிலையில் மனைவி பத்மினி, மகன் வீட்டில் இருந்து வருகிறார். அவ்வப்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு வரும் ராஜசேகருக்கு, கடந்த 12 ஆம் தேதி மீண்டும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து உறவினர்கள் ராஜசேகரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக ராஜசேகரை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஈரோடு தலைமை மருத்துவமனையில் ராஜசேகரை பிரிசோதனை செய்த மருத்துவர்கள் முதலில் அவரை ஐ.சி.யூவில் சிகிச்சைக்காக அட்மிட் செய்து சிகிச்சை பார்த்து வந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம்(14.10.2023) மருத்துவமனை தரப்பில் இருந்து அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு ராஜசேகர் இறந்து விட்டதாகவும், அவரது உடல் பிணவறையில் இருக்கும் என்றும் கூறி உள்ளனர். மேலும் அதனை உறவினர்களிடம் தெரிவிக்கும் படியும் கூறி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை காவல்துறையினர் சிவகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு காவல்துறை மூலம் உறவினர்களுக்கு இது குறித்து தெரிவித்த போது அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ராஜசேகரன் உடலைப் பெற அமரர் ஊர்தி எடுத்துக்க கொண்டு நேற்று(15.10.2023) அரசு தலைமை மருத்துவமனையின் பிணஅறைக்கு வந்தனர். அப்போது பிணவறையில் சென்று பார்த்த பொழுது ராஜசேகர் பெயரில் எந்த உடலும் வரவில்லை என்றும் கூறியுள்ளனர். அதன் பின் மருத்துவமனை நிர்வாகித்திடம் கேட்டபோது, ராஜசேகர் உயிருடன் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் யாராவது தெரியாமல் கூறி இருப்பார்கள் என்றும் அசால்ட்டாக கூறியுள்ளனர்.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் எப்படி இது போன்று கூறலாம் என்று முதலில் வாக்குவாதம் செய்தனர். பின்னர் ராஜசேகருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையைப் பார்த்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். அரசு மருத்துவமனையை நம்பி ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக வரும் நிலையில், இது போன்று ஒரு சில மருத்துவர்கள் செய்கின்ற சம்பவங்கள், பொது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உயிருடன் சிகிச்சை பெற்று வருபவரை இறந்து விட்டதாக கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.