Skip to main content

பரிசோதனையில் நெகடிவ்; மூச்சு திணறல் ஏற்பட்டு ஊரே போற்றும் கிராம நிர்வாக அலுவலர் மரணம்!!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021
Negative on examination; Village administration officer passed due to suffocation

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ள ராமநத்தம், பெரங்கியம் ஆகிய கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலராக பணி செய்து வந்தவர் வினோத் குட்டி கண்ணா(36). இவர் தான் பணிசெய்யும் கிராமங்களில் மக்களிடம் நல்ல பெயர் எடுத்தவர். பெரிய எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லாமல் மக்கள் பணிகளை சரியாக உடனுக்குடன் செய்து கொடுத்து அவர்களின் பாராட்டைப் பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி முதல் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடல் வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமனத்தத்தில உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

 

அப்போது அவர் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் அவருக்கு நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளது. ஆனாலும் உடல்நிலை சீராகவில்லை, இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த 1ஆம் தேதி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மூச்சு திணறல் காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7 மணிக்கு வினோத் குட்டி கண்ணா உயிரிழந்துள்ளார். அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது அவரது மனைவிக்கு கடந்த 24ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த தகவல் கேள்விப்பட்டு சந்தோஷமடைந்த குட்டிகண்ணா உடல்நிலை சரியானதும் மனைவி குழந்தையை விரைவில் வந்துபார்க்க வருவதாக செல்போன் மூலம் மனைவியிடம் கூறியிருந்தார்.

 

ஆனால் திடீரென்று அவர் உயிரிழந்தது அவரது உறவினர்கள், நண்பர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராமநத்தம் -சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மிக முக்கியமான ஊர். இந்த ஊர் வழியாக பல்வேறு அரசு அதிகாரிகள் சென்னை, திருச்சி போன்ற பெரும் நகரங்களுக்கு செல்வார்கள். அப்படி செல்பவர்களுக்கு வேண்டிய சிறு சிறு உதவிகளை கிராம நிர்வாக அலுவலரான குட்டிக்கண்ணா மிகுந்த அக்கறையோடு செய்து கொடுப்பார். இதனால் அவர் மீது வருவாய்த்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள் மிகுந்த அன்பு செலுத்தி வந்தனர். மேலும் இவரது தந்தை வீரமுத்து இவரும் கிராம நிர்வாக அலுவலராக பணி செய்தவர். அவரும் தமது பணிக்காலத்தில் ஆதரவற்ற ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதும், பணி செய்தும், கிராம மக்களுக்கு தங்குதடையின்றி வருவாய்த்துறை மூலம் நடைபெறவேண்டிய சான்றுகளை உதவிகளைப் பெற்றுத் தருவார்.

 

ஏழை எளியவர்களை பசியாற வைத்து அவர்களுக்கு பஸ் செலவுக்கும் காசு கொடுத்து அனுப்புவார். அப்படிப்பட்ட தந்தை வீரமுத்து பணியில் இருந்த போது  உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து போனார். அப்போது மாணவனாக இருந்து படித்து தந்தை வழியில் மகனும் கிராம நிர்வாக அலுவலராக பணி ஏற்றார். அப்போது முதல் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்கள் அப்பகுதியில் சாலை ஓரங்களில், பஸ் நிலையங்களில் ஆதரவற்று நிற்கும் முதியோர்களுக்கு உணவுப் பொருட்களை வாங்கிச் சென்று  பசியாற வைப்பார். உதவி என்று வருபவர்களுக்கு அவர்கள் பசியாற வைத்து உதவி செய்து அனுப்புவார். பலருக்கும் நல்லது செய்த நல்ல உள்ளம் படைத்த கிராம நிர்வாக அலுவலர் வினோத் குட்டி கண்ணாவின் இந்த திடீர் மரணம் பல தரப்பினரையும் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்