ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
இவ்விழாவின் மேடையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''இதனைத் துவக்க விழா என்று சொல்வதா அல்லது மாபெரும் விவசாயிகள் மாநாடு என்று அழைப்பதா என்ற எண்ணத்தோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதால் இன்று என் மனமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது. அந்த மகிழ்ச்சியில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி எதைச் செய்தாலும் அதில் ஒரு முத்திரையைப் பதிப்பார். அந்த வகையில் முத்திரை பதித்திருக்கக்கூடிய இந்த விழாவில் தமிழகத்தினுடைய முதல்வர் என்ற முறையில் நான் கலந்து கொள்வதில் மிகுந்த பெருமைப்படுகிறேன்.
தமிழக அரசினுடைய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. இந்த விழாவின் மூலமாக ஐம்பதாயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கக்கூடிய வகையில் இந்த விழாவானது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஒரு லட்சம் இணைப்புகளை நாம் வழங்கி இருக்கிறோம். அதோடு சேர்த்து இன்று 50,000 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகள் அதிலும் இந்த குறுகிய காலத்திற்குள்ளாக வழங்கி இருக்கிறோம் என்று சொன்னால் இதைவிட மிகப்பெரிய சாதனை இல்லை என நான் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு முன் எந்த அரசும் இப்படி ஒரு சாதனையைச் செய்ததாக வரலாறு கிடையாது. நம்முடைய அரசு தான் செய்து காட்டி இருக்கிறது. ஏன் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. நம்முடைய மாநிலம் தான், தமிழ்நாடு தான் அந்த சாதனை செய்து காட்டியிருக்கிறது. அதனால் தான் இதைப் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய நாள் என்று சொன்னேன்.
செந்தில் பாலாஜி எப்பொழுதும் டார்கெட் வைத்து ஒரு செயலை செய்வார். தனக்குள் ஒரு டார்கெட்டை வைத்துக் கொண்டு, அந்த டார்கெட்டை எப்படியும் முடித்தே தீருவார் நம்முடைய செந்தில் பாலாஜி. ஒரு இலக்கை தனக்கு தானே வைத்துக் கொண்டு அதை முடித்துக் காட்டக்கூடிய வல்லவர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் செந்தில் பாலாஜி என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தி, அவரை பாராட்டுவது மட்டுமல்லாமல் அவருக்கு துணை நின்ற அதிகாரிகள், அலுவலர்கள் என அத்தனை பேரையும் இந்த நேரத்தில் மனதார பாராட்டுகிறேன்'' என்றார்.