சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எம்.பி.பி.எஸ் படிப்பை முடிக்காமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த 5 போலி மருத்துவர்களை காவல்துறையினர் ஒரே நாளில் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள ஆலச்சாம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகள் கவி பிரியா (21). ஆவணியூரில் கிளினிக் நடத்தி வருகிறார். இவர், எம்பிபிஎஸ் படிக்காமல் சிகிச்சை அளித்து வருவதாக இடைப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர் சுதாகரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மருத்துவர் சுதாகரன், இடைப்பாடி காவல்துறை எஸ்ஐ சிவசங்கர் மற்றும் காவலர்கள், கவி பிரியாவிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் எம்பிபிஎஸ் படிக்காமலேயே நோயாளிகளுக்கு அலோபதி முறையில் ஊசி, மருந்து, மாத்திரைகள் வழங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி ராமாபுரத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக வேப்பனஹள்ளி வட்டார அரசு மருத்துவமனை மருத்துவர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அவர் அளித்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி காவல்துறையினர் அந்த மருந்து கடையில் விசாரித்தனர். அங்கிருந்த குப்புராஜ் (28) என்பவர், நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும், அவரிடம் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ்கள் ஏதும் இல்லை என்பதும் தெரிய வந்தது. மருந்து கடைகளில் வேலை செய்த அனுபவத்தைக் கொண்டு அவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதையடுத்து குப்புராஜை காவல்துறையினர் கைது செய்தனர். அங்கிருந்து ஏராளமான மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப்பள்ளியில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கஜகஸ்தான் நாட்டில் எம்பிபிஎஸ் படித்ததாகக் கூறி, ஷானிமா (24) என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது அவரிடம் எம்பிபிஎஸ் படித்ததற்கான சான்றிதழ் ஏதும் இல்லாதது தெரிய வந்தது. மேலும், அதே ஊரைச் சேர்ந்த சவுகத் அலி என்பவர், மருந்தாளுநர் படிப்பை முடித்து விட்டு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் நடத்தி வந்த கிளினிக்குகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. ஓசூர் அருகே உள்ள கொத்தகொண்டப்பள்ளியில் எம்பிபிஎஸ் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த ஸ்ரீனிவாசன் (35) என்பவரும் கைது செய்யப்பட்டார்.