நாடு முழுவதும் செப்டம்பர் 12- ஆம் தேதி அன்று நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 13/07/2021 அன்று தொடங்கியது.
இந்த நிலையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று (15/07/2021) டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்தார்.
இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்த ஆண்டு நீட் தேர்வு 13 மொழிகளில் நடைபெறுகிறது. பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகள் நடப்பாண்டில் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு 14 நகரங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்ற நிலையில், புதிதாக செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய நான்கு நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இதனால் 18 நகரங்களில் நீட் தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. அத்துடன் தமிழகத்தில் தேர்வு மையங்களின் எண்ணிகையும் அதிகரிக்கப்படும். இந்த தகவலை தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தெரிவித்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.