நீட் ரத்து செய்ய வலியுறுத்தி 7வது நாளாக இருசக்கர பயணம்: மயங்கி விழுந்ததால் பரபரப்பு
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தங்க.சண்முகசுந்தரம். மக்கள் சேவை இயக்கத்தின் தேசிய தலைவர்.
இவர் விவசாயிகள் பிரச்சனை தொடங்கி நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் திட்டத்திற்கு எதிராக பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகளுக்கு இழப்பீடு வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் கழிவு நீர் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்.
இந்த நிலையில் தற்போது நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்களை ஆதரித்து நீட்டுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை தொங்கவிட்டபடி கடந்த 7 நாட்களாக இரு சக்கர வாகன பிரசாரம் செய்வதுடன் மாணவர்கள் போராட்டங்களிலும் பங்கேற்று வருகிறார்.
இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் திடீரென மயங்கி ஆட்சியர் அலவலக வளாகத்தில் விழுந்தார். அப்போது அங்கு வந்த போலிசாரிடம் தனக்கு சேர்வு ஏற்பட்டு படபடப்பாக உள்ளது என்னை மருத்துவமனைக்கு கொண்டு போங்கள் என்றார்.
ஆனால் போலிசாரோ, இது சண்முகசுந்தரத்தின் நூதன போராட்டம் என்று சொல்லி அவரை கைது செய்து திருக்கோகரணம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்தும் மருத்துமனைக்கு கொண்டு செல்ல வலியுறுத்தியும் போலிசார் கண்டுகொள்ளவில்லை அதனால் தன் உடல் மிகவும் சோர்வடைந்துள்ளது என்கிறார்.
இந்த தகவல் அறிந்த நீட் எதிர்ப்பு குழுவினர் திருக்கோகர்ணம் காவல் நிலையம் சென்று சண்முகசுந்தரத்தை மீட்க உள்ளனர்.
இரா.பகத்சிங்