அண்ணாமலை பல்கலை.யில் விடுதி மாணவியின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கதம்பம் பட்டி பகுதியை சேர்ந்த மாணவி லாவண்யா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை விவசாயம் படித்து வந்தார். சிதம்பரத்தில் உள்ள தாமரை விடுதியில் தங்கியிருந்தார். இன்று காலை 10 மணி அளவில் அவர் விடுதியில் இருந்து மாணவி லாவண்யா வெளியேவந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று லாவண்யாவின் கழுத்தை கத்தியால் அறுத்தார். உடனே மாணவி கூச்சல்போட்டு அலறியதால் அங்கு உள்ளவர்கள் கற்கலால் சரமாரியாக தாக்கினர். வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே அங்கு நின்றவர்கள் சுற்றிவளைத்து அவரை பிடித்து அண்ணாமலை நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே கழுத்து அறுக்கப்பட்ட மாணவி லாவண்யா ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே மற்ற மாணவிகள் அவரை மீட்டு சிதம்பரம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் வேலூர் மாவட்டம் கதம்பம்பட்டியை சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. என்ஜினீயரிங் பட்டதாரியான அவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். லாவண்யாவும், நவீனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் ஆவார்கள். லாவண்யாவை அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்தார். அவரது காதலை லாவண்யா ஏற்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நவீன் இன்று காலை லாவண்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.