Skip to main content

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 13 மாணவிகள்; என்.சி.சி மாஸ்டரின் கொடூரச்செயல்

Published on 19/08/2024 | Edited on 19/08/2024
NCC Master misbehaved with schoolgirls

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் பகுதியில், பிரபலமான தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பர்கூர் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே, இந்த பள்ளி வளாகத்தில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடைபெற்றது. இதனால் இங்குப் படிக்கும் 17 மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே தங்கி தினமும் முகாமில் பங்கேற்றனர்.

இந்த நிலையில், என்சிசி முகாமிற்குச் சென்ற 8ம் வகுப்பு மாணவி ஒருவர்.. கடந்த 8ம் தேதி அதிகாலை நேரத்தில் பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, என்சிசி பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சிவராமன் என்பவர் பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வந்துள்ளார். அங்குத் தூங்கிக்கொண்டிருந்த பள்ளி மாணவியை அழைத்துச் சென்று என் பக்கத்தில் உட்கார வேண்டும் என கூறியிருக்கிறார். இதனால் அச்சத்தில் இருந்த மாணவி என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறார். அந்த நேரத்தில், சிவராமன் அந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து வெளியில் சொன்னால் உன்னைக் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் புகார் கூறியிருக்கிறார். ஆனால், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்ற நோக்கத்தில் இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளனர். இதை அடுத்து முகாம் முடிந்து வீட்டுக்குச் சென்ற அந்த மாணவி மிகுந்த சோர்வுடனும் பதட்டத்துடனும் இருந்துள்ளார். கடந்த 16ம் தேதி இரவு, அந்த மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், நடந்த விஷயங்களைத் தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். 

இதைக் கேட்டு அதிர்ந்துபோன குடும்பத்தினர் மாணவியைக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் எஸ்ஐ சூர்யகலா தலைமையில் விசாரணை நடத்தி அந்த பள்ளியின் என்சிசி பயிற்சியாளர் சிவராமன் மற்றும் முதல்வர் சதீஷ்குமார் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில்  போக்சோ பிரிவில் சிவராமனை கைது செய்யச் சென்றபோது, அவர் தலைமறைவானார். 

இதுகுறித்து தகவலறிந்த சேலம் சரக டிஐஜி உமா, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பள்ளி முதல்வரான திருப்பத்தூரைச் சேர்ந்த சதீஷ்குமார், ஆசிரியை ஜெனிபர், பள்ளி தாளாளர் சாம்சன் வெஸ்லி, பயிற்சியாளர்களான சக்திவேல், சிந்து, சத்யா மற்றும் சுப்பிரமணி ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அதில், கைதான சுப்பிரமணி முன்னாள் சிஆர்பிஎப் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, இந்த வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியாகப் பார்க்கப்படும் சிவராமன் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். சிவராமன் மீது பாலியல் வழக்குப் போடப்படுவதற்கு ஒருநாள் முன்பு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், தலைமறைவான சிவராமன்  கோவையில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அங்குச் சென்ற தனிப்படை போலீசார் சிவராமனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அங்கிருந்து தப்பிக்க முயன்ற அவருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராமனுக்கு மாவு கட்டுப் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பள்ளியில் நடத்திய விசாரணையில், சிவராமன் குறித்துப் பல அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில், கைது செய்யப்பட்ட சிவராமன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் சில பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், தர்மபுரி மாவட்டத்திலும் என்சிசி பயிற்சியாளராகச் சென்றுள்ளார். அங்கு அவர் முகாமில் தங்கியிருந்தபோது பாதிக்கப்பட்ட மாணவி மட்டுமல்லாமல், மேலும் பல மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.போலீசாருக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி இதுவரை 13 மாணவிகளை சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே பள்ளியில் இருந்து வெளியே சென்ற சில முன்னாள் மாணவிகளையும் மிரட்டி அவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்