நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய சர்ச்சை பேச்சினால் திமுகவிலிருந்து ராதாராவியை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் அவரே நடிகைகளை கேவலம் என்று பேசியது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதனால் நடிகை ராதிகா ஸ்டாலினுக்கு தனது கண்டனத்தை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், "தமிழக விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுடன் டெல்லிக்கே சென்றனர். டெல்லியில் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். 'எங்களை அழைத்துப் பேசுங்கள்' என விவசாயிகள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அழைத்துப் பேசினாரா? பெரும்பணக்காரர்கள், தொழிலதிபர்கள், நடிகர்களை அழைத்துப் பேசினார். 'கேவலம்' நடிகைகளை அழைத்துப் பேசினார்’ என்று நடிகைகளை ‘கேவலம்’ அழுத்தம் கொடுத்துப் பேசினார்.
ஸ்டாலின் பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து நடிகை ராதிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர், ‘’ஸ்டாலின், நடிகைகள் குறித்த உங்களின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. உங்கள் குடும்பத்துடன் பல ஆண்டுகளாக நல்லுறவை நாங்கள் கொண்டுள்ளோம். உங்கள் தந்தையை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம். உங்கள் குடும்பத்தையும், உங்களையும் தாழ்த்தி விடாதீர்கள்’’ என பதிவிட்டுள்ளார்.