காவிரி விவசாயிகளின் கண்ணீரை இயற்கை தான் துடைத்தது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் கட்சிக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ''இன்று தமிழகத்தில் இருக்கின்ற அரசு; இங்கே இருக்கிற அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் இல்லை. ஆயிரம் கன அடி தண்ணீர் தான் மட்டும் தான் திறந்து விடுகின்ற நிலைமை இருந்தபோது கர்நாடக மாநிலத்தில் கூட்டணி இருக்கும் காங்கிரஸ் கட்சி அதற்கு குரல் கொடுக்கவில்லை. அங்கே சென்று முதலமைச்சரை சந்திக்கவில்லை. நான் அதைச் சொல்வதற்கு காரணம் ஏதோ மழை வந்தது, வெள்ளம் வந்தது மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது.
ஆனால் குரல் கொடுத்து தண்ணீரை பெறமுடியாத ஒரு அரசு தமிழ்நாட்டில் இருந்து கொண்டிருக்கின்ற காட்சியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கண்ணீர் சிந்துகின்ற விவசாயிகளின் கண்ணீரை அரசு துடைக்கவில்லை. இயற்கையே பெய்து கண்ணீரை துடைத்து இருக்கிறது. அதே நேரத்தில் மடிக்கணினி என்பது இந்திய வரலாற்றில் தமிழகத்தின் வரலாறு. எந்த ஆட்சியிலும் எந்த மாநிலத்திலும் இப்படி இல்லை. நாம் ஆட்சியில் இருந்தவரை ஏறத்தாழ 53 லட்சம் மணி மடிக்கணினிகள் வழங்கிய வரலாறு தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. ஒரு மடிக்கணினி 12,500 ரூபாய். நான் எதற்காக செல்கிறேன் என்று சொன்னால் இன்றைக்கு திமுக ஆட்சி மூன்றரை ஆண்டு காலம் நடந்திருக்கிறது. இன்றுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை. டேப் என்று சொல்கிறார்களே அதுவும் வழங்கப்படவில்லை. 5 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு ஆண்டுதோறும் மடிக்கணினி வழங்கும் வரலாறு. இதை எல்லாம் இந்த அரசு கிடப்பில் போட்டுவிட்டது'' என்றார்.