வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. உருவாகும் புயலானது தென்மேற்கு வங்கக்கடல் நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 8-ம் தேதி காலையில் வட தமிழ்நாடு-புதுச்சேரி-தெற்கு ஆந்திரா கரையொட்டிய பகுதியை நோக்கி புயல் நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாகை, சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்து வருகிறது, வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து இந்த ஆறு குழுக்கள் விரைந்து வருகின்றன. தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்து வருகிறது.