ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தனித்து நின்றால் தான் மக்களிடையே என்ன மரியாதை இருக்கிறது என்பது தெரியும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தெரிவித்திருக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் பீர் முகம்மது தலைமையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன் கலந்துகொண்டு பேசுகையில், “ஈரோட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெறும். அதிமுக இரண்டாக பிளவுபட்டு இருப்பதுபோல் ஒரு மாய தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். 95% அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமியின் பக்கம்தான் இருக்கிறார்கள்.
நாங்கள்தான் அதிமுக எனக் கூறிக்கொண்டு பேப்பர் அறிக்கையை மட்டும் வைத்து அரசியல் செய்பவர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து நிற்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய மரியாதை என்னவென மக்கள் தெரிய வைப்பார்கள். திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு அந்தக் கட்சிக்கு வெண்சாமரம் வீசுவோர்களுக்கு இந்த இடைத்தேர்தல் தக்க பாடம் புகட்டும்” என்றார். இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி தனித்து நிற்க வேண்டுமென அதிமுக துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன் மேடையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டத்தில் சினிமா நடிகர் கஞ்சா கருப்பு, நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.