சிதம்பரம், நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவிற்கு ஜூலை 6ஆம் தேதி காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும். அதனைத் தொடர்ந்து உற்சவம் நடைபெறும். இந்தக் காலத்தில் அரசின் வழிகாட்டுதல்படி 6ஆம் தேதி முதல் காலை 9 மணிமுதல் 12 மணிவரையிலும் மாலை 5 மணிமுதல் 8 மணிவரையிலும் பொதுமக்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.
7ஆம் தேதிமுதல் 13ஆம் தேதிவரை காலை 7 மணிமுதல் 10 மணிவரையிலும் மாலை 5 மணிமுதல் 8 மணிவரையிலும் பொதுமக்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். தேர் அன்று (14.7.2021) காலை 9 மணிமுதல் 12 மணிவரை ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜரை தரிசிக்கலாம் என்றும் 15.7.2021 தரிசனத்தன்று தரிசனம் முடிந்த பிறகு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பொது தீட்சிதர்கள் தெரிவித்துக்கொள்கிறார்கள் என்று கோயிலில் பேனர் வைத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு கோயில்களில் திருவிழா மற்றும் குடமுழக்கு நடத்த தடைவிதித்து பொதுமக்கள் வழிபட மட்டும் அனுமதியளித்துள்ள நிலையில், தீட்சிதர்கள் பொதுமக்களைத் திருவிழா நேரத்தில் கோயிலுக்குள்ளே வர தடைவிதித்து திருவிழாவை நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சிதம்பரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழாவுக்கு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு 6ஆம் தேதி பொதுமக்களுக்கு காலை 9 மணிவரை அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், தீட்சிதர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கோயில் ஊழியர்கள் உள்ளிட்ட 1,800க்கும் மேற்பட்டவர்கள் திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என்றும் இதற்குப் பத்திரிகையாளர்கள், காவல்துறை, வருவாய்துறையினருக்கு அனுமதி இல்லை என்றும் அறிவித்துள்ளனர். கோயில் உள்ளே ஒரே நேரத்தில் கூடும் அனைவரும் கோவிலுக்குள்ளே இருக்கப் போவது இல்லை. கொடியேற்றம் மற்றும் திருவிழா காலம் முடிந்தவுடன் அனைவரும் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும்போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கொடியேற்றம் மற்றும் கோயில் திருவிழா நிகழ்ச்சிக்கு சம்பந்தபட்ட தீட்சிதர்கள் மற்றும் ஊழியர்களை அனுமதித்து நோய் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.