சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுக்கு இருமுறை தேர் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தேர்த்திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மார்கழி ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அதிகாலை ஐந்து மணிக்கு சாமி, கோவில் கருவறையிலிருந்து தேருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. இதில் விநாயகர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, முருகன் உள்ளிட்ட தேர்கள் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரம் கால் மண்டபத்திற்கு சாமிகளை எடுத்துச் சென்று மகா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து நாளை மதியம் 3 மணிக்குள் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். காவல்துறை பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்பட ஏற்படாத வகையில் தீவிர காவல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.