Skip to main content

மாணவி அனிதாவின் சோக மரணத்திற்கு முழுக்க முழுக்க நரேந்திர மோடியே குற்றவாளி! வைகோ

Published on 01/09/2017 | Edited on 01/09/2017
மாணவி அனிதாவின் சோக மரணத்திற்கு முழுக்க முழுக்க நரேந்திர மோடியே குற்றவாளி! வைகோ 

மாணவி அனிதாவின் சோக மரணத்திற்கு முழுக்க முழுக்க நரேந்திர மோடி அரசுதான் பொறுப்பு. மத்திய அரசே குற்றவாளி என்று குற்றம் சாட்டுகின்றேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்காக, அரசுப் பாடத்திட்டமாகிய +2 தேர்வு எழுதி அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக்கல்வி பயிலும் வாய்ப்பால் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூக மாணவ மாணவிகள், கல்வி பயிலும் சமூக நீதி காப்பாற்றப்பட்டு வந்தது. மத்திய அரசின் மூர்க்கத்தனமான போக்கினால், எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத நீட் தேர்வு அடிப்படையில்தான் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று அநீதி செய்தது. 

இதைத் தடுப்பதற்காகத் தமிழக அரசு இடைவிடாது முயற்சி செய்தது. முதல் அமைச்சரும், அமைச்சர்களும் பலமுறை டெல்லி சென்று, பிரதமரையும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் சந்தித்து வற்புறுத்தினர். 

நம்ப வைத்துக் கழுத்து அறுக்கும் வகையில் தமிழக அரசை அவசரச் சட்டம் கொண்டு வரச் செய்து, அதற்கு மத்திய அரசின் கல்வித்துறை, சட்டத்துறை, சுகாதாரத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் கொடுத்துவிட்டு, பின்னர் உச்சநீதிமன்றத்தில் அந்த ஒப்புதலை ரத்து செய்துவிட்டதாக வாதிட்ட அக்கிரமம், சுதந்திர இந்திய வரலாற்றிலேயே நடைபெறாத மோசடி ஆகும். 

அரியலூர் மாவட்டத்தில், குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதி திராவிடக் குடும்பத்தில் பிறந்த அனிதா என்கின்ற அந்த இளம் தளிர், தான் ஒரு மருத்துவர் ஆகி, சேவை செய்ய வேண்டும் என்ற இலட்சியத்தோடு, ஆண்டு முழுவதும் இரவு பகலாகப் படித்து, 1176 மதிப்பெண்கள் பெற்று, தான் உறுதியாக டாக்டர் ஆகி விடலாம் என்று நம்பி இருந்த நிலையில், நீட் தேர்வு முறை என்ற இடி, அவள் தலையில் விழுந்தது. 

நீதிக்காக வழக்குத் தொடர்ந்தாள். அவளது ஆசைக்கனவுகள் அனைத்தும் நாசமானபின், செய்தியாளர்களுக்குக் கொடுத்த பேட்டியைப் பார்க்குபோது இதயமே வெடிக்கின்றது. ‘எனக்கு நீட் என்றால் என்ன என்றே தெரியாது; இனி என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என்ற நா தழுதழுக்கச் சொல்வதைப் பார்க்கும்போதே, துக்கம் தொண்டையை அடைக்கிறது. இந்தக் கொடுந்துயருக்கு முழுக்க முழுக்க நரேந்திர மோடி அரசுதான் பொறுப்பு ஆகும் என்று குற்றம் சாட்டுகின்றேன்.  

உயிரை மாய்த்துக் கொள்ளாமல் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட வேண்டும் என்று மாணவ சமுதாயத்திற்குக் கூற வேண்டிய கடமை இருந்தாலும், அனிதாவைப் போல் எத்தனை ஆயிரம் மாணவ மாணவிகள் உள்ளம் உடைந்து நலிந்து இருப்பர் என்பதை எண்ணுகையில், கவலை மேலிடுகின்றது. மத்திய அரசு, தன்னுடைய ஆணவப் போக்கை மாற்றிக்கொண்டு,  அந்தந்த மாநில அரசுகள்தான் கல்வித்துறை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அந்த அணுகுமுறைதான் கூட்டு ஆட்சித் தத்துவத்துக்குப் பாதுகாப்பு ஆகும். 

சார்ந்த செய்திகள்