கடந்த மக்களவை தோ்தலின் போது புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து நெல்லிக்குப்பம் தொகுதியில் (27.3.2019) அன்று நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியைக் குறித்து அவதூறாகப் பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது அந்த மாநில உள்துறை கூடுதல் செயலர் சுந்தரேசன் தவளைகுப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது சம்மந்தமாக நாஞ்சில் சம்பத் மீது ஐபிசி 294 பி, 354 ஏ, 509 ஆகிய மூன்று பிரிவுகளில் தவளை குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நாஞ்சில் சம்பத் ஆஜராகமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேரில் ஆஜராகுமாறு நாஞ்சில் சம்பத்துக்கு 17- ஆம் தேதி சம்மன் அனுப்பபட்டது.
இந்நிலையில் இன்று (19/03/2020) காலையில் தவளை குப்பம் உதவி ஆய்வாளா் இளங்கோ தலைமையில் 4 போலீசார் குமரி மாவட்டம் மணக்காவிளையில் உள்ள நாஞ்சில் சம்பத்தின் வீட்டிற்கு அவரை கைது செய்ய வந்தனர். அப்போது வீட்டில் இருந்த நாஞ்சில் சம்பத் எந்த அடிப்படையில் என்னைக் கைது செய்ய வந்தீர்கள் எனக் கேட்டு வாக்கு வாதம் செய்தார்.
இதனைத் தொடா்ந்து நாஞ்சில் சம்பத்தின் வீட்டு முன் திமுகவினர் கூடினார்கள். அப்போது கூறிய நாஞ்சில் சம்பத் எனக்கு அனுப்பபட்ட சம்மனில் ஆஜராக 23- ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. அப்படி இன்னும் அவகாசம் இருக்கும் போது எதற்காக இன்று என்னை கைது செய்ய வர வேண்டும். நான் 23- ஆம் தேதி வரை ஆஜராகமல் இருந்தால் என்னைக் கைது செய்ய வந்திருக்கலாம் எனக் கூறினார்.
இதற்கிடையில் குமரி மாவட்ட போலீசாருக்கு எந்தத் தகவலும் கொடுக்காமல் புதுச்சேரி போலீசார் வந்ததால் அவர்களுக்கு குமரி மாவட்ட போலீசார் எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. இதனால் நாஞ்சில் சம்பத் வீட்டு முன்னே நின்று கொண்டிருந்த போலீசார் டிபன் சாப்பிட்டு விட்டு வருவதாகக் கூறிச் சென்றனா். அந்த நேரத்தில் நாஞ்சில் சம்பத்தும் வீட்டில் இருந்து காரில் வெளியே புறப்பட்டுச் சென்றார்.