கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமலிடம், ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியா?' என்று கேட்டனர், ‘அது குறித்து தற்போது முடிவு செய்யப்படாது. தேர்தல் வரும் போது பார்க்கலாம்' என்று பதில் அளித்தார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் செய்தியாளர்களை சந்தித்தார் நாஞ்சில் சம்பத். அப்போது அவரிடம், காங்கிரஸ் - கமல் கூட்டணி உருவாகுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ''திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் கட்சி இருக்கும். ஏனென்றால் கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது. இந்தியாவில் அடுத்தது யார் ஆட்சியை பிடிப்பது என்றுதான் சண்டையே நடக்கிறது. அதில் காங்கிரஸ் கட்சி தன்னை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் திமுகவுடன் இருப்பதுதான் காங்கிரஸ் கட்சிக்கு பாதுகாப்பானது. காங்கிரஸ் கட்சி திமுகவை உதறிவிட்டு கமலை நம்பி சென்றால், காங்கிரஸ் தமிழ்நாட்டில் கல்லறைக்கு போய்விடும். காங்கிரஸ் அப்படி தற்கொலை செய்து கொள்ளாது. கமலுக்கு அரசியல் தெரியவில்லை. அதனால் அப்படி பேசுகிறார்''. இவ்வாறு கூறினார்.