தமிழக அரசியலில் சசிகலா கும்பல், மன்னார்குடி கும்பலுக்கு வேண்டப்பட்டவர்கள் மிரட்டி பணம் பறித்த காலம் போய் நாங்க ஓ.பி.எஸ்.குரூப், என்று ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்களை மிரட்டும் காலமாக மாறி இருக்கிறது என்பதற்கு திருச்சியில் நடந்த இந்த சம்பவம் ஒரு உதாரணம்..
திருச்சி தில்லைநகர் 10வது கிராஸ் ரைட் சிட்டி என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவர் கிருஷண்மூர்த்தி இவரிடம் நாங்கள் துணைமுதல்வர் ஓ.பி.எஸ் தம்பி ராஜா பெயரை சொல்லி மிரட்டி பணம் பறித்தவர்களை திருச்சி போலிஸ் விரட்டி பிடித்து கைது செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது அவரோ, ரைட்சிட்டி என்கிற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறோம், லால்குடி பக்கம் பிளாட் போட்டு விற்பனை செய்து கொண்டிருக்கிறோம். இது இல்லாமல் தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் வியாபாராம் செய்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த வாரம் பெரியகுளம் பகுதியில் ஒரு இடம் விற்பனைக்கு வந்தது நாங்கள் அந்த இடத்தை விசிட் பண்ணி பத்திரம் சரி பார்க்கிறோம் என்று சொல்லி ரூ.1 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து பத்திரம் வாங்கிட்டு வந்தோம்.
அடுத்த இரண்டாவது நாளே பெரியகுளத்தில் உள்ள அ.தி.மு.க. கட்சியில் இருக்கிறேன் என்று சொல்லி, முகுந்தன் துணைசேர்மன் என்பவர், எங்க ஏரியாவுல ரியல்எஸ்டேட் பண்றீங்க, எங்களை மீறி எதுவும் பண்ண முடியாது. எங்களுக்கு பணம் கொடுத்தா தான் நீ வியாபரமே பண்ண முடியும் 1 கோடி ரூபாய் கொடு - கட்சி வளர்ச்சி நிதி வேணும், நீ யார்கிட்ட போனாலும் எதுவும் பண்ண முடியாது என்று என்று மிரட்ட ஆரம்பித்தார்கள். நானும் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் என்னை மிரட்டி வந்தனர்.
இதனால் வேறு வழியில்லாமல் ரூ.10 லட்சம் தருவதாக சொன்னேன். உடனடியாக அதனை தரும்படி மிரட்டவும் என்னிடம் பணம் இல்லை. கையில் ரூ.1 லட்சம் தான் இருக்கிறது என்று சொன்னவுடன் அதை பறித்துக்கொண்டு அடுத்த வாரம் வருவதாக சொல்லிவிட்டு சென்றனர்.
ஆனால் அடுத்த நாளே, என் அலுவலகத்துக்கு TN59 BT 8344 என்ற எண் கொண்ட காரில் திண்டுக்கல் செல்வநாயகம், மதுரை செல்வம், பெரியகுளம் பிரேம், முருகேசன் உள்ளிட்ட 7 பேர் வந்து மீதி 9 லட்சம் பணம் கொடு இல்லை என்றால் கடத்திவிட்டு சென்றுவிடுவோம் என மிரட்டவும் நான் வேறு வழியில்லாமல் தில்லைநகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு என் நண்பர்கள் மூலம் தகவல் சொன்னேன். அவர் ஒரு டீம்மோட வந்து மொத்த கும்பலையும் விரட்டி பிடித்ததார். இதில் இரண்டு பேர் மட்டும் தப்பினார்கள்.
போலீசாரின் விசாரணையில், ஓ.பி.எஸ். பெயரை சொல்லி மிரட்டி பணம் பிடுங்குகிறார்கள் என்றதும் பயந்து போய் உதவி கமிஷனர் பெரியய்யாவுக்கு தகவல் சொல்ல அவரும் விசாரணையை தீவிர படுத்தினார்கள்.
கடைசியாக கமிஷனர் அமல்ராஜீக்கு விஷயம் சென்றவுடன், அவர் நேரடியாக துணை முதல்வர் ஓ.பி.எஸ், மற்றும் அவர் தம்பி ராஜாவிடம் இது பற்றி தகவல் சொல்ல.. அவர்கள் இரண்டு பேரும் அந்த குரூப் யார் என்றே தெரியவில்லை அவர்களை உடனே கைது பண்ணி சிறையில் அடையுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார். தில்லைநகர் போலிஸ் இது பற்றி வெளியே பத்திரிகைகளுக்கு யாருக்கும் தகவல் சொல்லாமல் இரவு வரை காத்திருந்து 7 பேர் மீது வழக்கு பதிந்து 5 பேரை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
இது குறித்து நாம் தில்லைநகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் கேட்ட போது… அவங்க அ.தி.மு.க. ஆட்களே கிடையாது. துணைமுதல்வர், பெயரை சொல்லி மிரட்டவில்லை, அவுங்க ஏரியாவுல தொழில் தொடங்க வந்திருப்பதால், எனக்கு பணம் கொடுங்கன்னு மிரட்டினதா புகார் வந்தது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து இருக்கிறோம் அவ்வளவு தான் என்றார்.