நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசை முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் தூங்கி கொண்டிருந்த 4 வடமாநில தொழிலாளர்களில், 3 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். 4 தொழிலாளர்களும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் கரப்பாளையத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதி பட்டதாரி பெண் நித்யா ஆடு மேய்க்க சென்ற போது, பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், போலீசார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனக்கூறி ஒரு பிரிவினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இது இரு பிரிவினரிடையே மோதலாக வெடித்துள்ளது. இதனால் தொடர்ச்சியாக வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கொட்டகை, டிராக்டர்களுக்கு தீ வைப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது. அதற்கு மாறாக மற்றொரு பிரிவினர் சார்ந்த ஆலைக் கொட்டகை மற்றும் அவர்களைச் சார்ந்த பல்வேறு இடங்களில் தீ வைப்பது, பெட்ரோல் குண்டு வீசுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீக்காய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராகேஷ் (19), சுகுராம் (28), எஸ்வந்த் (18), கோகுல் (23) ஆகிய வடமாநில தொழிலாளர்கள் பலத்த தீக்காயங்களுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ராகேஷ் என்பவர் உயிரிழந்தார். இவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.