நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. முட்டைக்கு விலை நிர்ணயம் செய்யக்கூடிய தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), முட்டை விலையை ஏப். 9ம் தேதி நிலவரப்படி,10 காசுகள் உயர்த்தி, 420 காசுகளாக நிர்ணயம் செய்துள்ளது.
கோழிகளுக்கு கரோனா மற்றும் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டதாக விஷமிகள் பரப்பிய வதந்தியால் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கோழிப்பண்ணைத் தொழில் பெரிய அளவில் முடங்கியது. கோழி முட்டை 100 காசுகளாக சரிந்தன. அதேபோல், கறிக்கோழி விலை கிலோ 5 ரூபாய் ஆக வரலாறு காணாத வீழ்ச்சி கண்டது.
ஆனால், வைரஸ் தொற்று குறித்து பரவிய தகவல்களில் உண்மை இல்லை என்று கால்நடைத்துறை ஆதாராப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து முட்டை மற்றும் கறிக்கோழி விலைகள் கணிசமாக உயரத் தொடங்கியது.
தற்போது ஊரடங்கு உத்தரவால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் இறைச்சி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது. சந்தையில் ஏற்பட்ட தேவை காரணமாக முட்டையின் விலையும் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
இதையடுத்து, ஏப். 9ம் தேதி நிலவரப்படி முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 410 காசுகளில் இருந்து 420 காசுகளா உயர்த்தி என்இசிசி அமைப்பு நிர்ணயித்துள்ளது.இந்த விலையேற்றம் முட்டை உற்பத்தியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.