ராசிபுரம் ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் சட்ட விரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் இதுவரை 6 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்றி உத்தரவிடப்பட்டு உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளரான அமுதா என்கிற அமுதவல்லி (50), சட்ட விரோதமாக குழந்தைகளை வாங்கி, பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு குழந்தையில்லா தம்பதிகளிடம் விற்பனை செய்து வந்துள்ளது அண்மையில் தெரிய வந்தது. இதன் பின்னணியில் அமுதாவுடன் பல இடைத்தரகர்களுக்கு தொடர்பு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
விசாரணையின் ஒவ்வொரு படிநிலையிலும் இந்த கும்பலைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதோடு, அடுத்தடுத்து புதுப்புது இடைத்தரகர்களும் வரிசையாக கைது செய்யப்பட்டனர். இதுவரை அமுதா, அவருடைய கணவர் ரவிச்சந்திரன் (55), கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்த நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த நிஷா என்கிற ஹசீனா (26), பர்வீன் (37), அருள்சாமி (48), பவானியைச் சேர்ந்த செல்வி (29), லீலா (36) ஆகிய எட்டு பேரை கைது செய்துள்ளது காவல்துறை.
இந்த கும்பல் பெரும்பாலும் கொல்லிமலையில் உள்ள பழங்குடியினத்தைச் சேர்ந்த வறுமையில் உழலும் தம்பதிகளை குறிவைத்து இயங்கி வந்துள்ளது. எந்தெந்த வீட்டில் எல்லாம் புதிதாக குழந்தை பிறந்துள்ளதோ, யார் யாருக்கெல்லாம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் வைத்துக்கொண்டு வளர்க்க முடியாமல் அவதிப்படுகின்றனரோ அவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்துத் தருவது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசனின் வேலை.
இதுகுறித்து விசாரித்து தரவுகளை முழுமையாக கொடுத்தால் முருகேசனுக்கு ஒரு தரவுக்கு 2000 ரூபாயும், குழந்தையை வாங்கிக் கொடுத்தால் மேற்கொண்டு 5 ஆயிரம் ரூபாயும் கமிஷன் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. கொல்லிமலையில் மட்டும் முருகேசன் மூலமாக 10 குழந்தைகளை விலை பேசி வியாபாரத்தை முடித்துள்ளனர். பின்னர் சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் ஆசை வலை வரிக்கும் அமுதா தரப்பு, குழந்தைகளை ஆடு, மாடுகளைப்போல் பேரம் பேசி வாங்கியுள்ளது. கொல்லிமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியிடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்குக்கூட குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார் அமுதா.
இவ்வாறு வாங்கப்படும் குழந்தைகளை நிறம், எடை, ஆண், பெண் என தரம் பிரித்து பல லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். அமுதா, ஒருபோதும் உள்ளூரில் குழந்தை வணிகத்தில் ஈடுபடுவதில்லை. ஈரோடு, கோவை, நெல்லை, மதுரை ஆகிய பகுதிகளில் அதிகளவில் இவ்வாறு சட்டவிரோதமாக குழந்தைகளை விற்பனை செய்துள்ளார். எல்லாம் முன்ஜாக்கிரதைக்காகத்தான்.
ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளில் குழந்தைகளை விற்பனை செய்யும்போது ஹசீனா, பர்வீன், லீலா, அருள்சாமி, செல்வி ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் அனைவருமே, ஏற்கனவே பள்ளிபாளையம், திருச்செங்கோடு ஆகிய அரசு மருத்துவமனைகளில் அமுதா பணியாற்றியபோது அவருக்கு அறிமுகமாகி இருக்கிறார்கள்.
இதுவரை நடந்த விசாரணையில் மொத்தம் 13 குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதையும், இதில் நான்கு குழந்தைகள் யார் யாருக்கு விற்கப்பட்டுள்ளது என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். விற்கப்பட்டது எல்லாமே பெண் குழந்தைகள்தான் என்கிறார்கள். பெரும்பாலும் இந்த கும்பல், யாரிடம் குழந்தை பெறப்பட்டது என்பதையும், யாரிடம் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது என்பதையும் மிக ரகசியமாக வைத்திருந்துள்ளனர். அதனால் குழந்தையை விலைக்குக் கொடுத்த தம்பதிகள் யாருக்கும், தங்கள் குழந்தை இன்னாரிடம்தான் வளர்கிறது என்பது தெரியவில்லை.
இது ஒருபுறம் இருக்க, கடந்த 2014ம் ஆண்டு சேலத்தைச் சேர்ந்த வடிவேல்&அமுதா தம்பதிக்கு பிறந்த ஒரு பெண் குழந்தையை இலங்கையைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 8 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ராசிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜூ புகார் அளித்தார். ஆனால், இரண்டு தம்பதிகளுமே ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள் என்பதும், பரஸ்பர சம்மதத்தின் பேரிலேயே பெண் குழந்தையை இலங்கை தம்பதியிடம் ஒப்படைத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் ராசிபுரம் அமுதாவுக்கு தொடர்பில்லை என்று நாமக்கல் எஸ்பி அருளரசு கூறினார். இலங்கை தம்பதி வசம் ஒப்படைத்த குழந்தைக்கு தாராபுரத்தில் பிறப்புச்சான்றிதழ் பெறப்பட்டதாக சொல்லப்படுவதிலும் ராசிபுரம் அமுதாவுக்கு தொடர்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கொல்லிமலையில் உள்ள கிராமங்களில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் பிறந்த 50 குழந்தைகள் திடீர் திடீரென்று மாயமாகி இருப்பதையும் இந்த விவகாரத்துடன் உள்ளூர் மக்கள் சிலர் முடிச்சுப்போட்டு பேசுகின்றனர். ஆனால் அந்தக் குழந்தைகள் இறந்துவிட்டனவா? உயிருடன் இருக்கின்றனவா? என்பதும் அவர்களுக்கே புரியாத புதிராக இருந்து வருகிறது. அதனால் அந்தக் குழந்தைகளும் இவ்வாறு சட்ட விரோதமாக கைமாற்றப்பட்டு இருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது.
இந்த விவகாரத்தைத் தோண்ட தோண்ட பல பூதாகரமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை நாமக்கல் மாவட்ட போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது தமிழக காவல்துறை. ஏற்கனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்களை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் உதவியாளராக பணியாற்றி வந்த அமுதாவின் கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலையில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்த முருகேசன் ஆகிய இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.