கொல்லிமலை காப்புக்காட்டுக்குள் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. உள்ளாடையால் வாயைக் கட்டிப்போட்டுவிட்டு, மர்ம நபர்கள் அவரை பாலியல் வல்லுறவு செய்துவிட்டுக் கொலை செய்திருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டலினி நாடு கீரைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன். விவசாயி. இவருடைய மனைவி தீபா (27). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 6 மற்றும் 2 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஜூலை 12- ஆம் தேதி மதியம் தீபா, ஆத்துக்காடு பகுதியில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அங்கிருந்த ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டுள்ளார். அதையடுத்து, மொக்கசடையன் கோயில் அருகே உள்ள ஆற்று ஓடையில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஆடு, மாடுகள் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்றுள்ளன. அதனைப் பார்த்த தீபா பதற்றத்துடன், கால்நடைகளை விரட்டி விடுவதற்காகச் சென்றார். அதன்பின் அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இரவாகியும் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஓடைக்கரையில் அவர் கொண்டு சென்ற அழுக்குத் துணிகள் அப்படியே கிடந்தன. அருகில் உள்ள காப்புக்காட்டுக்குள் சென்று பார்த்தபோது மரங்கள் அடர்ந்த ஓரிடத்தில், அவர் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்தார். தீபா அணிந்திருந்த பாவாடையால் அவருடைய வாய் கட்டப்பட்டு இருந்தது.
தலையில் பலத்த காயம் இருந்தது. அதேநேரம் அவர் அணிந்திருந்த நகைகள் அப்படியே இருந்தன. மர்ம நபர்கள் அவரை பாலியல் வல்லுறவு செய்து, கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து வாழவந்திநாடு காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
காவல்துறை எஸ்.ஐ. மணி மற்றும் காவலர்கள், தீபாவின் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். அவர் கல்லால் தாக்கிக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. தீபாவின் சடலம், உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உள்ளூரைச் சேர்ந்த நபர்களா அல்லது காப்புக்காட்டுக்குள் நடமாடிய மர்ம நபர்கள் யாருக்கேனும் இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காப்புக்காட்டுக்குள் இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம் மலைக்கிராம பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.