தமிழகத்தில் சமீப காலமாக போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் போலீசார் இதனைத் தடுக்கும் விதமாக பல்வேறு முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல்லைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் சுந்தர பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் நாமக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது, குஜராத் மாநில பதிவு எண்ணுடன் கூடிய ஒரு சொகுசு கார் ஒன்று திருச்சி நோக்கி வந்துள்ளது. அதை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அந்த வாகனத்தில் பயணித்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரேமா ராம் (வயது 28) பூபேந்திர சிங் (வயது 24) இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சொகுசு காரின் மூலமாக அவர்கள் பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு குட்கா பொருட்களை கடத்தி செல்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த கார் மற்றும் 5 லட்சம் மதிப்பிலான 300 கிலோ குட்கா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
பிரேமா ராம் மற்றும் பூபேந்திர சிங் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த குட்கா பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டது? திருச்சியில் அதை யாருக்கு விற்பனை செய்ய இருந்தார்கள்? என்பது பற்றி காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.