எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அரசாணையில், சிபிஐ விசாரித்தவர்களை விடுவிக்க முடியாது என்ற பிரிவை ரத்து செய்யக்கோரி ராஜிவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த பிப்ரவரி 1 -ஆம் தேதி அரசாணையும் வெளியிட்டது.
அந்த அரசாணையில் இந்திய குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 435-வது பிரிவின் கீழ் சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்பு விசாரித்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு இது உத்தரவு பொருந்தாது எனவும் இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக 27 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு வழக்கின் பின்னனியையோ அல்லது விசாரணை அமைப்பையோ ஆராயக்கூடாது என்றும், முன் கூட்டியே விடுதலை செய்யும் நடைமுறையில் பாரபட்சம் இல்லாமல் அனைத்து கைதிகளையும் சமமாக கருத வேண்டும் என்றும் கூறியுள்ளார். எனவே அந்த அரசாணையில் 435 (1) (ஏ) பிரிவின் கீழ் விடுதலை செய்யமாட்டோம் என்பதை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சி.ஜீவா பாரதி