‘அரசு கட்டுப்பாட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் கிடப்பில் போடப்பட்ட உண்டியல்! காணிக்கை செலுத்த முடியாமல் தவிக்கும் பக்தர்கள்!!’ என்ற தலைப்பில் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இச்செய்தி திண்டுக்கல் திண்டுக்கள் அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக் மாநகர் அபிராமி அம்மன் (காளஹஸ்தீஸ்வரர்) கோவில் கட்டுப்பாட்டில் குழு, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர்கள் கவனத்திற்கும் சென்றது.
அதைத்தொடர்ந்துதான் அறநிலையத்துறையின் இணை ஆணையர் கார்த்திக் உத்தரவின் பேரில் அபிராமி அம்மன் கோவிலில் உள்ள செயல் அலுவலர் தங்கலதா தலைமையில் ஊழியர்கள் சிலர், செல்லாண்டியம்மன் கோவிலில் கிடப்பில் போடப்பட்டு பல மாதங்களாக வெயிலிலும், மழையிலும் கிடந்த பெரிய இரும்பு உண்டியலை பார்வையிட்டனர். அப்போது அங்கு வந்த சிலர், “இந்த உண்டியல் பெரிதாக இருக்குறது; அதனால் அங்கு வைக்க வேண்டாம். நேர்த்தி கடனுக்காக வைக்கப்பட்டு இருந்த பழைய உண்டியல் இருக்கிறது. அதனையே நாங்கள் வைத்து கொள்கிறோம்” என்று கூறினர். இவர்கள் கோயிலை ஆக்கிரமித்து வைத்து இருப்பவர்களின் உறவினர்கள் என்று சிலர் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் கூறியதைக் கேட்டுக்கொண்ட அதிகாரிகள், இதுகுறித்து அறங்காவலர் குழுவிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அறங்காவலர் குழு அறநிலைத்துறை அதிகாரிகள் சேர்ந்து ஆலோசனை நடத்தில், நேர்த்திக் கடனுக்காக வைக்கப்பட்ட பழைய உண்டியல் இருக்கிறது என்றால் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து ஒரு வருஷமாகிறதே அப்போதே வைத்திருக்கலாமே? அல்லது திருவிழா காலத்திலாவது வைத்திருக்கலாமே? சரி நீங்கள் உண்டியலை வைக்க வில்லை என்று அபிராமி அம்மன் கோயில் சார்பாக புதிய உண்டியல் வாங்கி கொடுக்கப்பட்டது. ஆனால் அதையும் வைக்காமல் கிடப்பில் போட்டுள்ளீர்கள் அந்த அளவுக்கு சிலர் அரசு கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வைத்துக்கொண்டு பல வருடங்களாக பயனடைந்து வருகிறார்கள். இது தெரியாமல் சிலர் அவர்களுக்கு துணை போய் வருவதுதான் வருத்தமாக இருக்கிறது என்று அவர்கள் கூறியதையும் நக்கீரன் இணையத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
இதனைத் தொடர்ந்து, “பழைய உண்டியல் வைப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. அதனைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் அவர்கள் கூறியதுபோல் பழைய உண்டியலையே வையுங்கள்..” என்று அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்பேரில் ரூ.25 ஆயிரம் செலவு செய்து பழைய உண்டியலை புதுப்பித்து இ.ஒ தலைமையில் மீண்டும் செல்லாண்டியம்மன் கோவிலில் உண்டியல் வைக்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்கின்றனர்.
அதுபோல் அபிராமி அம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர்களான சண்முகவேல். வீரக்குமார். மலைச்சாமி ஆகியோர் ஜே.சி உத்தரவின் பேரில் கோயில் பூசாரி மற்றும் கரகப் பூசாரி ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மூலமாக ஒரு கமிட்டி போட்டு கோயிலை அந்த கமிட்டி நிர்வாகிக்க முடிவு செய்து இருப்பதாகவும். அதை தொடர்ந்து கமிட்டிக்கு முக்கிய நபர்களை தேர்வு செய்யும் பணியில் அறங்காவலர் குழுவினர் இருப்பதாக தெரிகிறது.
நக்கீரன் இணையச் செய்தி எதிரொலி மூலம் இணை ஆணையர்(ஜே.சி) கார்த்திக் அதிரடி நடவடிக்கையால் கோவிலில் புது உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்திருப்பதைக் கண்டு பொதுமக்கள் ஜே.சி. உள்பட அறநிலைத்துறை மற்றும் அறங்காவலர் குழுவை ம் பாராட்டியும் வருகிறார்கள்.