தமிழக மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தேசிய பொதுசெயலாளர் எம்ஜிகே நிஜாமுதீன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
தற்போது ஆள்பவர்களால் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான போக்குகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக குரல் கொடுக்கும் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் மீதான அடக்குமுறைகளை கண்டிக்கிறோம். மேலும் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் திரு.நக்கீரன் கோபால் அவர்கள் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது தமிழக ஆளுநரின் பணிகளில் தலையிடுவதாக ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சமூக அவலங்களையும், ஊழல்களையும், அரசும், ஆட்சியாளர்களும் மூடிமறைக்கும் பொழுது அதனை அம்பலப்படுத்தி மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் மிக உன்னதமான பணியை செய்யும் பத்திரிகையாளர்களையும், ஊடகங்களையும் நசுக்கும் நோக்கில், அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, பொய்வழக்குகளில் கைது செய்வது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயலாகும்.
ஊழல்களையும் தவறுகளையும் தான் சார்ந்த ஊடகத்தின் மூலம் அழுத்தமாக பதிவு செய்து வந்தவர் நக்கீரன் கோபால், குறிப்பாக சந்தன மரக்கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் தமிழக அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி அரசுக்கு பேருதவியாக செயல்பட்டவர் இவர்
.
நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக பல உண்மைகளை நக்கீரன் வார இதழ்களில் பதிவு செய்துவரும் நிலையில், அதற்கு மாற்று கருத்து இருக்குமேயானால் சட்டத்தின் மூலம் எதிர்கொள்ளாமல் நக்கீரன் கோபால் அவர்களை பொய் வழக்கில் கைது செய்வது, நடந்த உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.எனவே தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்குகளையும், கைது நடவடிக்கைகளையும் வாபஸ் வாங்க வேண்டும் என்றும், நக்கீரன் கோபால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.