ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கடந்த டிசம்பர் மாதம் 50 -க்கும் மேற்பட்ட பட்டதாரி வாலிபர்கள் ஒன்று திரண்டு மாவட்ட எஸ் .பி. தங்கதுரையைச் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அதில், "ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் தாசம்பாளையத்தைச் சேர்ந்த எம்.எஸ்.பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவன உரிமையாளர் சண்முகம் என்பவர் எங்களிடம், மத்திய அரசின் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 50 சதவீதம் மானியம் பெற்று வீடுகள் கட்டித் தருவதாகக் கூறினார். இதை நம்பி நாங்கள் ஒவ்வொருவரும் இரண்டு லட்சம், மூன்று லட்சம் என அவரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தோம். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர் சொல்லியபடி வீடு கட்டிக் கொடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்திவந்தார். பிறகு ஒருநாள் திடீரென அவர் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் எங்கோ தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டுபிடித்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும்" என்று அந்தப் புகார் மனுவில் கூறியிருந்தனர்.
இந்தப் புகார் மனுவை விசாரிக்க ஈரோடு எஸ்.பி. தங்கதுரை உத்தரவிட்டார். குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதன்பேரில், எம்.எஸ்.பில்டர்ஸ் உரிமையாளர் சண்முகம், சென்ற ஆண்டு மே மாதம் 26ம் தேதி முதல் நவ., மாதம் 13ம் தேதி வரை மத்திய அரசின் வீட்டுவசதி வாரியம் மூலம் 50 சதவீத மானியத்தில் வீடு கட்டித் தருவதாகக் கூறி ஈரோடு, பவானி, குமாரபாளையம், அத்தாணி, விஜயமங்கலம், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருப்பூர், கோவை, தஞ்சாவூரைச் சேர்ந்த 57 பேரிடம் பணத்தை டெபாசிட் செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், முன் பணமாக ரூ.6.50 கோடி அளவுக்குப் பணம் பெற்று ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில் ஜனவரி 10ஆம் தேதி ஈரோட்டில் எம்.எஸ். பில்டர்ஸ் நிறுவன உரிமையாளர் சண்முகத்தை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் எஸ்.ஐ. தமிழரசு தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்பேரில், அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஒரு சரக்கு ஆட்டோ, 2 பைக், 2 செல்ஃபோன் என மொத்தம் ரூ.3லட்சம் மதிப்பிலான பொருட்களை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து சண்முகத்தின் மீது மோசடி, ஏமாற்றுதல், கூட்டுச் சதி செய்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
இந்த மோசடியில் சண்முகம் மனைவி மேனகபிரியா தான் முக்கிய நபராக இருந்துள்ளார். அதேபோல் எம்.எஸ்.பில்டர்ஸ் மேலாளர் சுரேஷ், கட்டிட மேஸ்திரிகள் உதயகுமார், குணசேகரன், நவீன் ஆகிய ஐந்து பேரும் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்கள். அவர்களைப் பிடிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களை நெருங்கி விட்டதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
மோசடி வேலைக்கு மூளையாகச் செயல்பட்ட மோகன பிரியா பிடிபட்டால் தான் மத்திய அரசு பெயரை பயன்படுத்தி இந்தக் கும்பல் செய்த மற்ற மோசடிகளும் வெளிவரும் என்கிறார்கள்.