Skip to main content

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; நாகை மீனவர்கள் படுகாயம்;

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

Nagapattinam fishermen injured in beaten by Srilankan pirates

 

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதோடு வலை,மீன்கள்,ஜிபிஎஸ் கருவிகளையும் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

 

நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சபாபதி என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் அவரது மகன்கள் நான்கு பேர் நேற்று இரவு கோடியக்கரை அருகே கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இரண்டு அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களின் பைபர் படகை சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் மீனவர்களின் படகுகளில் ஏறிய இலங்கை கடல் கொள்ளையர்கள் அவர்களது கழுத்தில் கத்தியை வைத்து இரும்பு ராடால் தாக்க தொடங்கியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த நாகை மீனவர்கள் அவர்களின் தாக்குதலை தடுத்துள்ளனர். ஆத்திரமடைந்த கடற்கொள்ளையர்கள் நான்கு மீனவர்களையும் சரமாரியாக தாக்கியதோடு படகுகளில் இருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ வலையை 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் மற்றும் ஜிபிஎஸ் செல்போன் உள்ளிட்ட கருவிகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

Nagapattinam fishermen injured in beaten by Srilankan pirates

 

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் செருதூர் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட மீனவர்களை சக மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த, நாகை செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி அவர்களுடைய ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை மீன் உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மீனவ கிராம மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

இலங்கை கடல் கொள்ளையர்களின் தொடர் தாக்குதல் மற்றும் பொருளாதார இழப்பை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள செருதூர் மீனவர்கள், கோடியக்கரை கடற்பகுதியில் இந்திய கப்பல்கள் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர் அவ்வாறு ரோந்து பணியை மேற்கொண்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான வலைகள், படகுகள் மற்றும் அவர்களின் உயிர், உடைமைகள் பாதுகாக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்