நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள காட்டுமூலை கிராமத்தில் காட்டாமணி மண்டிய குட்டகன்னி குளத்தில், பாதி எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. அந்த சடலத்தை அந்தப் பகுதியில் வேலை செய்தவர்கள் பார்த்ததையடுத்து திட்டச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலை கேட்ட நாகப்பட்டிணம் துணை கண்காணிபாளர் முருகவேல் தலைமையிலான போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில் எரிந்து கிடந்த சடலம் திருப்புகலூர் மேல்பகுதி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பது தெரியவந்தது.
அதன்பிறகு விசாரணையை குடும்பத்தினரிடம் இருந்து துவங்கிய போலிஸாருக்கு அதிர்ச்சியான தகவலே கிடைத்தது. தமிழ்வாணனை மகனே வெட்டி கொலை செய்ததும், கொலைக்கான தடையங்களை மறைக்க காட்டில் வைத்து எரித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தமிழ்வாணனுக்கு 48 வயதான ஜெயசுதா என்கிற மனைவியும், தமிழ்ச்செல்வன், சந்தியா, தவசீலன், தனுஷ் ஆகிய நான்கு பிள்ளைகளும் உள்ளனர்.
இது குறித்து காவல்துறையினரிடம் விசாரித்தோம். "தமிழ்வாணன் தினமும் காலையும் இரவு குடித்துவிட்டு மனைவி ஜெயசுதாவிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளாக வெளியூரில் வேலை பார்த்து வந்த மூத்த மகன் தமிழ்ச்செல்வன், கரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டில் தங்கி இருக்க தந்தை தினமும் குடித்து விட்டு அம்மா ஜெயசுதாவிடம் தகராறு செய்துவந்ததை தமிழ்ச்செல்வன் இரண்டு மூன்று முறை கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தமிழ்வாணன் தினமும் குடித்துவிட்டு வீட்டில் ரகளை செய்வதை நிறுத்தவில்லை.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு தமிழ்வாணன் வழக்கம்போல குடித்துவிட்டு அரிவாளை எடுத்து மனைவி ஜெயசுதாவை வெட்ட முற்பட்டபோது, தமிழ்செல்வன் அரிவாளை, தமிழ்வாணனிடமிருந்து பிடுங்கி தந்தை தமிழ்வாணனை ஆத்திரத்தில் வெட்டியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தமிழ்வாணன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த தமிழ்செல்வனும் அவரது தாய் ஜெயசுதாவும் தமிழ்வாணனின் உடலை ஒரு பாயில் சுருட்டி அரசூர் ரோட்டில் உள்ள தண்ணீர் இல்லாத குட்டகன்னி குளத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, பாதி எரியாத நிலையில் உள்ள தமிழ்வாணனின் உடலை காட்டாமணக்கு காட்டில் மறைத்து வைத்து போட்டுவிட்டு எதுவும் நடக்காததுபோல சகஜமாக இருந்துள்ளனர். அந்த பகுதியில் வேலை பார்த்தவர்களுக்கு துர்நாற்றம் வீசவே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்துதான் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ஜெயசுதா, தமிழ்செல்வன், தவசீலன் ஆகிய 3 மூவரையும் திட்டச்சேரி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.