Skip to main content

அடுத்தடுத்து இரண்டு பேர் தீக்குளிக்க முயற்சி; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

 

மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர்ப்பு முகாம்நாள் என்றாலே தீக்குளிக்க முயலும் சம்பவங்களும் வாடிக்கையாகிவிட்டது, அந்த வகையில் இன்று நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் அடுத்தடுத்து இரண்டு குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

nagapattinam



சம்பவம் 1: நாகை மாவட்டம் விழுந்தமாவடி மீனவகிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவருக்கும் நாகப்பட்டிணம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தைச்சேர்ந்த நிர்மலா என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 6 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மலாவிற்கும் வேலுவிற்கும் கருத்துமோதல் வந்து பிரிந்துவிட்டனர். முதல் மனைவி பிரிந்து சென்றதால், இரண்டாவதாக விஜயலட்சுமி என்கிற பெண்ணை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வேலு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன.
 

இந்தவிவகாரத்தால் நான்கு ஆண்டுகளாக விழுந்தமாவடி கிராம மீனவ பஞ்சாயத்தார்கள் வேலுவை கடலுக்கு செல்லவிடாமல் கட்டுப்பாடு விதித்து, கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்திருக்கின்றனர்.
 

இந்தநிலையில் முதல் மனைவியான நிர்மலா ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் வேலுவின் வீட்டிற்கு திரும்பி வந்ததோடு, வீட்டில் இருந்து கொண்டு இரண்டாவது மனைவியான விஜயலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டு வருகிறார். இரண்டாவது மனைவியை வீட்டை விட்டு விரட்டுவதற்கு முயற்சிப்பதாகவும், அதற்காக கிராம பஞ்சாயத்தார் ஐந்து லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். நடவடிக்கை ஏதும் இல்லாததால் குறைதீர்வு கூட்ட நாளான இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுக்க வந்தவர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் டீசல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.


 

சம்பவம் 2 ; சுனாமி பேரலையிடம் தாய் தந்தையரை பறிகொடுத்த, சமீபத்தில் வீசிய கஜாபுயலின் போது கணவரை இழந்து, பெண் குழந்தையோடு ஆதரவற்று வாழ்ந்து வருகிறார்.
 

வேளாங்கண்ணியில் பூக்கார தெருவைச் சேர்ந்தவர் மேரி காளிதாஸ் என்ற பெண் வசிக்க இடம் இல்லாததால் தற்போது அதே பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக குடிசை போட்டு தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரை வேளாங்கண்ணி பேரூராட்சி அதிகாரிகள் குடிசையை காலி செய்ய சொல்லி மிரட்டிவருவதாக கோரி வசிக்க இடம் கேட்டு பலமுறை மன்றாடியிருக்கிறார். அவருக்கு நியாயம் கிடைக்காத விரக்தியில் தனது பெண் குழந்தையுடன் இன்று ஆட்சியரகம் வந்து உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அவரை ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பில் ஈடுபட்ட போலிஸார் தடுத்து அழைத்து சென்றுள்ளனர். நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் இருவர் அடுத்தடுத்த தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 



 

சார்ந்த செய்திகள்