கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம்,திருநாகேஸ்வரம், சோழபுரம் பேரூராட்சிகளில் மின் தகன மேடை அமைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது. கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த கண்ணன் தாக்கல் செய்த பொது நல மனுவில், "கரோனாவால் உயிரிழப்பு அதிகமாகும் போது தகனம் செய்ய மூன்று பேரூராட்சியில் மின் தகன மேடை இல்லை. மின் தகன மேடை இல்லாததால் அருகிலுள்ள கும்பகோணம் மயானத்திற்கு உடல்கள் கொண்டு வரப்படுகின்றன. எனவே, தாராசுரம், திருநாகேஸ்வரம், சோழபுரம் பேரூராட்சிகளில் மின் தகன மேடை அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (11/06/2021) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், மின் தகன மேடை அமைக்க கோடிக்கணக்கில் பணம் செலவாகும் என்பதால் உத்தரவு பிறக்க இயலாது. மனுதாரர் கோரிக்கைப் பற்றி தஞ்சை மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து உரிய முடிவு எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.