நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பொதுமக்களில் ஏழு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடத்துவங்கி உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசுஅனுமதி அளித்துள்ளது. கரியாப்பட்டினம் பகுதியில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திடம் அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வந்தநிலையில், நாகை மாவட்டம் கரியாப்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டு, கடந்த மூன்றாம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கரியாப்பட்டினம், செட்டிபுலம், மருதூர் ,வேதாரன்யம், வாய்மேடு,தாணிக்கோட்டகம், குரவப்புலம், தென்னம்புலம், தகட்டூர், கருப்பம்புலம், உள்ளிட்ட கிராமத்துமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு ஆதரவாக வர்த்தகர்கள் தாமாக முன்வந்து கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதே சமயம் டாஸ்மார்க் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருந்தன. கரியாப்பட்டினம் உள்ளிட்ட பெரும்பாலானஇடங்களில் ஆட்டோக்கள் ஓட்டாமல், வர்த்தகர்களோடு ஒன்றுகூடி, ஆட்டோக்களையும் அங்கு நிறுத்தி போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது காவல்துறையினருக்கும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்களை காவல்துறை டிஎஸ்பி ஷீகாந்த். கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு மிரட்டவும் செய்தார்,அதில் ஒருவரை, " உன்னோட பொழப்புல மண் அள்ளி போட்டுருவேன், உன்னோட பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடாம, உனக்கு வாழ்க்கை பிச்சை கொடுத்திருக்கேன். உணக்கு தெரியவும் வச்சுருவேன் புரியவும் வச்சிடுவேன். உன்னுடைய யூனிஃபார்ம் எங்கடா, யூனிஃபார்ம் இல்லாமல் எப்படிடா ஆட்டோவ இங்க கொண்டு வந்தீங்க." என எகிற, ஆட்டோ ஓட்டுனரோ நாங்க இன்னக்கி ஆட்டோ ஓட்டலயா என தயங்கியபடி கூற. இப்ப உண்ண கைதுசெய்வேன் எவன்டா வந்து கேட்பான். என ஒருமையில் பேசி மிரட்டினார். பிறகு ஆட்டோக்களை அப்புறப்படுத்தினர்.
போராட்டத்தின் காரணமாக வேதாரண்யம் தாலுகா முழுவதும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியே காணப்படுகிறது. மேலும் திருக்காரவாசல் முதல் கரியாப்பட்டினம் வரை 144 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் செயல்படுத்த உள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடவேண்டும். காவிரிபடுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மத்திய,மாநில அரசுகள் இதை உணர வேண்டும். என சுவரொட்டிகள் மூலமும் எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.
போராட்டத்திற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எட்டாவது நாள் போராட்டம் தொடர்ந்த போது அங்கு வந்த கரியாப்பட்டினம் போலீசார் அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பந்தலை அகற்றினர், மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஹைட்ரோகார்பன் திட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சரவணமுத்து உள்ளிட்ட 7 பேரையும் அதிரடியாக கைதுசெய்து திருச்சி மத்தியசிறையில் அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என பெண்கள் அனைவரும் ஓரணியாகத்திரண்டு கழலியப்ப அய்யனா் கோயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உருவாகியிருக்கிறது. நாகை மாவட்ட முழுவதிலிருந்தும் காவல்துறையினர் அங்கு வீதிவீதியாக குவிக்கப்பட்டிருக்கின்றன. கரியாப்பட்டினம் முழுவதும் காக்கிகளின் கூடாரம் போல் காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் சமயத்தில் கஜாபுயல் பாதித்த பகுதிகள் போராட்ட களமாக வலுப்பெற்றிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.