Skip to main content

போலீஸாருக்கு சவால் விடும் கடத்தல்காரர்கள்; தொடரும் சிலை திருட்டு!!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

பல ஆண்டுகளுக்கு முன்பு சத்தமே இல்லாமல் திருடுபோன கோயில் சிலைகளை மீட்கும் பணிகள் ஒருபுறம் நடந்து வரும் வேளையில், எந்தவித அச்சமும் இல்லாமல் அடுத்தடுத்து பிரசித்திப்பெற்ற கோயில்களின் சிலைகளை குறிவைத்து தங்களின் கைவரிசையை காட்டிவருகின்றனர் சிலை கடத்தல்காரர்கள்.

 

nagai temple statue incident

 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடக்கரையோரமுள்ள கிராமம் கொண்டல், முப்போக விவசாயத்தால் பசுமைக்கு எப்போதும் பஞ்சமில்லாத அந்த கிராமத்தில் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த குமார சுப்பிரமணிய சுவாமி கோயிலும் அழகு சேர்த்து அருள்பாவித்து வருகிறது. அந்த கோயிலை பழனி முருகன் கோயிலுக்கு நிகரானதாகவும், கீழ்பழனி என்றும் பக்தர்களால் அழைப்படுவதுண்டு. அந்த அளவிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற அந்த கோயிலின் கருவறையில் இருந்த உற்சவர்களான முருகன், வள்ளி தெய்வானை ஆகிய மூன்று சிலைகளும் தான் தற்போது திருடு போயிருக்கிறது.

 

nagai temple statue incident


என்ன நடந்தது கோயில் குருக்கல் நட்ராஜ் கூறுகையில்," கோயிலில் வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு  இரவு 10 மணிக்கு கோயிலை பூட்டிவிட்டு போனேன். மறுநாள் காலை வழக்கம்போல் அதிகாலை பூஜை செய்ய  கோவிலைத் திறக்க வந்து பார்த்ததும் அதிர்ச்சியாயிடுச்சி. கோயிலில் வெளிப்புற இரண்டு கேட்டுகளின் பூட்டும் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த மூன்று உற்சவர் சிலைகளையும் காணவில்லை. பிறகு அறங்காவலர்களுக்கும் போலீஸ்க்கும் தெரிவித்தேன்." என்கிறார்.

 

nagai temple statue incident


"முருகன் சிலை மட்டும் இரண்டரை அடி உயரம், வள்ளி, தெய்வானை ஆகிய இரண்டு சிலைகளும் தலா ஒன்றரை அடி உயரம் கொண்டவை. மூன்று சிலைகளும் 100 கிலோவை தாண்டி இருக்கும். அதன் மதிப்பு ஒரு கோடிக்கு மேல் இருக்கும். இதை ஒரிரூ நாளில் செய்திடவில்லை, உள்ளூர் பகுதிகளை சேர்ந்தவர்களும் செய்திடமுடியாது, யாரோ அந்த சிலைகள் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் நன்கு தெரிந்த இங்குள்ளவர்களின் உதவியில்லாமல் இந்ததிருட்டு நடந்திருக்க வாய்ப்பில்லை. நள்ளிரவுக்கு மேல் பூட்டை சாவிகொண்டு திறந்து தங்களின் கைவரிசை காட்டியுள்ளனர். அதிலும் ஜாக்கிரதையாக கோயிலில் பல இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகளை துண்டித்து, எந்த தடயமும் விடாமல் சாமர்த்தியமாக  திருடியுள்ளனர். அதோடு திருடவந்தவர்கள்  சிலைகளை மட்டுமே குறிவைத்து வந்துள்ளனர். உண்டியல்கள் உடைக்கப்படவில்லை, விலை உயர்ந்த மூலவர் சிலைகளின் தங்க நகைகள் உள்ளிட்ட எந்த பொருட்களையும் திருடவில்லை, சிலைகளை மட்டுமே குறிவைத்து கொள்ளையடித்துள்ளனர்." என்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.

சீர்காழி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். எந்த ஒரு தடயமும் இல்லாமல் சிலை திருடியிருப்பது காவல்துறையினரை  திணறடிக்கவே செய்துள்ளது.

கடந்த மாதம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த கோயில் குருக்களிடமிருந்தும், அவருக்கு உதவியாக இருந்த பாஜக பிரமுகரிடம் இருந்து பல கோடி மதிப்புடைய சிலைகள் கைப்பற்றப்பட்டு, அவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார், அதற்குள் இங்கு சிலை கானாமல் போயிருப்பது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.


             

சார்ந்த செய்திகள்