திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவிற்கு வாக்கு சேகரிப்பதற்காக அத்தொகுதிக்கு சென்றார். இதற்காக தூத்துக்குடியில் இருந்து பிரச்சாரத்திற்கு புறப்படலாம் என்று மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், கோரம்பள்ளம் பகுதியில் மு.க.ஸ்டாலின் தங்கவுள்ள சத்தியா ரிசார்ட் எனும் விடுதியில் இன்று காலை 6 மணி முதல் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். விடுதிக்கு உள்ளே வரும் கார்களையும், வெளியே செல்லும் கார்களையும் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய திமுக மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல்,
“திமுக தலைவர் தங்க உள்ள ரிசார்ட்டில் மட்டுமே சோதனை நடைபெற்று வருகிறது. இங்கு காலை ஆறு மணி முதல் சோதனை நடந்து வருகிறது. இதுவரை அவர்கள் விடுதியினுள் வரவில்லை. வெளியே நின்றபடி விடுதியினுள் வரும் வாகனங்களையும் விடுதியில் இருந்து வெளியேறும் வாகனங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி விமான நிலையம் வந்த ஸ்டாலினை தி.மு.க.வினர் திரளாக வரவேற்றனர். பின்பு ஸ்டாலின் அங்கிருந்து அருகில் உள்ள ராமச்சந்திரபுரம் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்று விட்டார்.
அவர்களுக்கு முழுக்க தோல்வி பயம் அதன் காரணமாகத்தான் இந்த சோதனை நடத்துகிறார்கள். திமுக வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அதனால் இந்த தேர்தலை நிறுத்திவிடலாம் என நினைக்கிறார்கள். எப்படி தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் சோதனை செய்தார்களோ அதுபோலவே இங்கும் சோதனை செய்து வருகின்றனர். வாகனத்தின் சீட்களை எல்லாம் தூக்கி மிகவும் கெடுபுடியாக சோதனை செய்துவருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி இன்னும் பத்து நாட்களில் முடியப்போகிறது என்ற பயத்தினாலும் ஒட்டப்பிடாரம் தொகுதியும் திமுகவிற்கு சாதகமாகவுள்ளது என்ற பயத்தினாலும் இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அதிமுகவினர் நேற்றே பண பட்டுவாடா செய்து முடித்துவிட்டார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடுவார் என்பது உறுதியாகிவிட்டதால், தோல்வி பயத்தில் இதையெல்லாம் செய்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.