நாங்குநேரியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான வசந்தகுமார், குமரி மாவட்ட எம்.பி.யானதால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய, நாங்குநேரித் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. களத்தில் வேட்பாளர்கள் மொத்தம் 23 பேர்கள் நின்றாலும் நேரடிப் போட்டி அ.தி.மு.க.வின் நாராயணன், காங்கிரஸின் ரூபி மனோகரன் இருவருக்குமிடையே தான். அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் உட்பட அந்த கட்சியினர், மற்றும் காங்கிரஸ் அதன் கூட்டணிக் கட்சிகளான தி.மு.க., வி.சி.க., ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என இரண்டு அணிகளும் போட்டி போட்டு தேர்தல் பணிகளை நடத்தினர்.
![reddiyarpatti](http://image.nakkheeran.in/cdn/farfuture/T9P21PTtPYkBjJVqMACIFLqHOg8CAVjjp_lOyIuY2MM/1572055729/sites/default/files/inline-images/reddiyarpatti-narayanan.jpg)
நாங்குநேரி இடைத்தேர்தல் பரப்புகளை அவ்வப்போது நக்கீரன் இணையதளம் செய்திகளை நடப்புகளை வெளியிட்டு வந்தது. இறுதிக் கட்டத்தில் வாக்காளர்களை வளைக்க இரண்டு தரப்புகளும் பட்டுவாடாக்களை மேற் கொண்டனர். இதனிடையே இரண்டு அணித் தலைவர்களின் பிரச்சாரங்களும் அனலைக் கிளப்பின. ஆனாலும் பட்டுவாடாக்கள் வாக்குப் பதிவு அன்று வரை கூடத் தொடர்ந்தது. வாக்குப் பதிவிற்கு முதல் நாள் முன்னரே தொகுதி சாராதவர்கள் வெளியேறி விட வேண்டும் என்பது தேர்தல் கமிசனின் உத்தரவு. அன்றைய தினம் தொகுதியைச் சாராதாவர்களான காங்கிரசின் தலைவர் கே.எஸ்.அழகிரி ரெட்டியார்பட்டி கிராமத்திலும், எம்.பி. வசந்குமார் கலுங்கடி கிராமத்திலும் இருந்ததால் அவர்கள் மீது நடத்தை விதி மீறல் தொடர்பாக மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதேசமயம் பரப்பாடி பூத்திலிருந்த அ.தி.மு.க. எம்.பி.யான விஜிலாசத்யானந்த் பற்றிய தகவல் தெரியவர எதிரணியினர் அது தொடர்பாக போராட்டம் நடத்த முன்வர, ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் அவர்களை சமாதனப்படுத்தி விட்டு, விஜிலா சத்யானந்த்தை வெளியேற்றினர். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இதனிடையே மருதகுளம், பரப்பாடி பகுதிகளில் பட்டுவாடா முயன்றதாக இருவரிடம் பறக்கும் படை பணத்தையும் கைப்பற்றியிருக்கிறது. பட்டபிள்ளை புதூர் கிராமத்தில் வந்த வாகனத்தைச் சோதனையிட்ட பறக்கும் படை தாசில்தார் கலைமதி அதிலிருந்த 1லட்சத்து 76 ஆயிரத்தைக் கைப்பற்றி வாகனத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த சத்தியேந்திரன் மீது வழக்கும் பதிவு செய்தார். அதேசமய 13 சதவிகித வாக்குகளைக் கொண்ட பட்டியலின மக்கள் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க அரசாணை பிறப்பிக்கக் கோரி தேர்தல் புறக்கணிப்பில் கடைசி வரை உறுதியாய் இருந்தனர். வாக்களிக்கவும் வராமல் போனது போன்றவைகள் பின்னடைவை ஏற்படுத்த 33445 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் நாங்குநேரி நாற்காலியைப் பறி கொடுத்தது.