
கலைஞருக்கும் பிடிக்கக் கூடிய திட்டம் தான் ‘நான் முதல்வன் திட்டம்’ என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், 13 இலட்சம் மாணவர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து சிறப்பாகச் செயல்படும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா இன்று மாலை கொண்டாடப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சி.வி. கணேசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “5 முறை தமிழகத்தை ஆட்சி செய்து இன்று நாம் காணும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இணைய தளத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன். கலைஞருக்கும் பிடிக்கக் கூடிய திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவு திட்டம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் வளர்ந்து வருகின்றன. அனைத்து தரப்பினரும் உயர்ந்து வருகின்றனர். மாணவர்கள், இளைஞர்களிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இந்த திட்டம் காரணமாக இருக்கிறது” எனப் பேசினார்.