கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாக நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களுக்கும், மண்ணிற்கும் பெரும்தீங்காக அமைந்திருக்கின்ற கூடங்குளம் அணு மின் நிலையத்தையே முற்று முழுதாக மூடக்கோரி பல ஆண்டுகளாக நாம் போராடிக்கொண்டிருக்கிற நிலையில், பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வீரியம் குறையாத கதிர்வீச்சுகளை வெளிப்படுத்தக்கூடிய அணுக்கழிவுகளை, கூடங்குளம் அணுஉலை அருகாமையிலேயே மண்ணில் புதைத்து வைத்து சேமிக்கும் திட்டம் என்பது மானுடச் சமுகத்திற்கு மட்டுமில்லாது இம்மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பேரழிவை விளைவிக்கக்கூடியது.
ஏற்கனவே அழிந்து வருகிற தமிழர் நிலத்தை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்கில் கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையத்தை அமைக்க முற்படும் மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன் தலைமையில் இன்று 21-06-2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 03 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
இதில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் அ.வினோத், தமிழர் தேசிய விடுதலைக் கழகம் சார்பில் ஆ.கி.சோசப் கென்னடி, தமிழர் நலப் பேரியக்கம் சார்பில் மு.களஞ்சியம், மருது மக்கள் இயக்கம் சார்பில் செ.முத்துப்பாண்டியன் ஆகியோர் கண்டனவுரையாற்றுகிறார்கள். இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனப்பேருரையாற்றுவார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும், நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் பாசறைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் கட்சியினரும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று அணுக்கழிவு சேமிப்பு மையம் எனும் நாசகாரத் திட்டத்தை தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிப்போம் என கூறப்பட்டுள்ளது.