வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கசம் பகுதியில் இயங்கி வருகிறது அரசின் மதுபானக்கடை. இந்தக் கடையின் பின்பக்கச் சுவற்றில் ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு ஒரு ஆள் உள்ளே நுழையும் வகையில் துளையிட்டு ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஏப்ரல் 19 ஆம் தேதி மதியம் கடை திறக்க வந்த ஊழியர்கள் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்தப் பகுதியில் அடிக்கடி திருட்டு நடப்பதால், இந்த டாஸ்மாக் கடையில் சிசிடிவி கேமரா பொருத்திவைத்துள்ளனர், அங்கு பணியாற்றும் ஊழியர்கள். மதுபாட்டில்களை திருடிச் சென்ற திருடர்கள், தங்கள் முகம் கேமராவில் பதிவாகக்கூடாது என சிசிடிவி கேமராவை உடைத்துச் சேதப்படுத்திவிட்டு அதன்பின் திருடியதாகக் கூறப்படுகிறது. ஹார்ட்-டிஸ்க் கம்ப்யூட்டரில் இருப்பதால், அதில் திருடர்கள் குறித்த பதிவு இருக்கிறதா எனக் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது. திருட்டு நடந்தது சம்பந்தமாக அக்கடை மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் தந்த புகாரின் அடிப்படையில் திருவலம் போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.