Skip to main content

நள்ளிரவில் நடந்த திருட்டு; ரேஷன் பொருட்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள்

Published on 02/08/2024 | Edited on 02/08/2024
Mysterious person stole ration items

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகே அமைந்துள்ளது ஏ.சாத்தனூர் கிராமம். இந்த பகுதியில் சுமார் 500க்கும் குடும்பங்கள் உள்ளன. இந்த ஊரின் மையப்பகுதியில் தமிழ்நாடு அரசின் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக இருப்பவர் சத்யா. இவர்.. கடந்த 31ஆம் தேதியன்று.. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை கார்டு வாரியாக பொதுமக்களுக்கு வழங்கிவிட்டு அன்று மாலை கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.

இதையடுத்து, அடுத்தநாள் 10 மணியளவில் சத்யா அந்த ரேஷன் கடையைத் திறப்பதற்காகக் கடை வீதிக்கு வந்திருக்கிறார்.  அப்போது, அந்த கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்யா உடனடியாக கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, அந்த ரேஷன் கடையில் இருந்த அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெட்டிகள் உள்ளிட்டவை திருடப்பட்டு அந்த கடையே வெறிச்சோடி காணப்பட்டது. 

இதனால் பதறிப்போன ரேஷன் கடை ஊழியர்கள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போயினர். அதற்கு, இந்த விவகாரம் ஊருக்குள் தெரிந்து பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடை முன் குவிந்தனர். கடையில் இருந்த ரேஷன் பொருட்கள் மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து எடைக்கல் காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரேஷன் கடையை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, நள்ளிரவு நேரத்தில் மினி டெம்போவை கொண்டு வந்த மர்ம நபர்கள் ரேஷன் கடையின் பூட்டை உடைத்து அதில் இருந்த ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான ரேஷன் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, புகாரின் பேரில் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். இதனிடையே, ரேஷன் பொருட்கள் திருடுபோன கடைக்கு உளுந்தூர்பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி, திருப்பெயர் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

சார்ந்த செய்திகள்