சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமார் 1,556 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் கெட்டுப்போன இறைச்சிகள் கொண்டுவரப்பட்டு கேட்பாரற்று கிடப்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 1,556 கிலோ கெட்டுப்போன இறைச்சி இருந்தது தெரிய வந்து, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டவை ஆடு மற்றும் கோழி இறைச்சி என்று தெரிய வந்துள்ளது. இந்த சோதனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, ''சமீப நாட்களாவே வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் கெட்டுப்போன இறைச்சிகள் தொடர்ந்து கைப்பட கைப்பற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி இதேபோல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கெட்டுப்போன இறைச்சிகள் 600 கிலோ அளவிற்கு கைப்பற்றப்பட்டு இருந்தது. இறைச்சியை யார் அனுப்பினார்கள் என தெரியவில்லை. யாரும் க்ளைம் பண்ணாமல் இந்த இடத்திலேயே இருந்துள்ளது. இதனால் கிடைத்த தகவல் அடிப்படையில் நாங்கள் இங்கு வந்த சோதனை செய்தோம்.
உணவு பாதுகாப்பு துறையின் சான்றிதழ் படி யாராவது இப்படி இறைச்சி அனுப்பினால் முகவரி, பெயர், போன் நம்பர் யாருக்கு அனுப்புகிறார்கள் என்கிற அனைத்து தகவலும் இருக்க வேண்டும் என நாங்கள் ரயில்வே துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ரயில்வே துறையும் அதை கன்சிடர் செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள். இறைச்சி என்பது விரைவில் கெட்டுப் போகக்கூடிய பொருள். எனவே அதனை முறையான முகவரி இல்லாமல் அனுப்பக்கூடாது என கேட்டுக் கொண்டுள்ளோம். இதேபோல் எக்மோர் ரயில் நிலையத்தில் பிடிபட்ட கெட்டுப்போன இறைச்சியும் எந்த முகவரிக்கு யாரால் அனுப்பப்பட்டது என்பது தெரியவில்லை'' என்றார்.