சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நாயக்கர்குப்பம் மீனவ கிராமப் பகுதியில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில மொழியில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று கரை ஒதுங்கியது. பார்ப்பதற்கு கேஸ் சிலிண்டர் போன்ற அமைப்பில் இருக்கும் அந்த மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது தொடர்பாக அந்தப் பகுதி மீனவர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். சுமார் ஒன்றரை அடி நீளமும் 6 அங்குலம் விட்டமும் கொண்ட அந்த உருளை குறித்து விசாரணை செய்யப்பட்டதில், ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் இது என்பது எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும் அந்த பொருளை யாரும் தொட வேண்டாம் என தடுப்பு அமைத்து சென்றுள்ளனர் போலீசார். இது அந்த மீனவ கிராமப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.