திருவள்ளூரில் பெட்டிக்கடையில் வாங்கிய குளிர்பானத்தில் என்னவென்றே தெரியாத மர்மமான பொருள் மிதந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே திருவண்ணாமலையில் 10 ரூபாய் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி குடித்த சிறுமி ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அனைத்து கடைகளிலும் விற்கப்படும் குளிர்பானங்களை உணவு பாதுகாப்புத்துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் திருவள்ளூர் கரிம்பேடு பகுதியில் ஒருவர் சாதாரண கடைகளில் விற்கப்படும் ஸ்ப்ரைட் எனும் குளிர்பானத்தை வாங்கி அருந்த முயன்றுள்ளார். அப்போது கண்ணாடிக் குப்பிக்குள் இருந்த அந்த குளிர்பான பாட்டிலில் சந்தேகப்படும் அளவிற்கு என்னவென்றே தெரியாத ஒரு பொருள் மிதந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்து சுதாரித்துக்கொண்ட அவர் அதனை வீடியோ பதிவு செய்துள்ளார். மேலும் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''வண்டிய நிறுத்திட்டு தாகமா இருக்குன்னு ஒரு கடையில் கூல்டிரிங்ஸ் குடிக்கலாம்னு வாங்கினேன். அதுல வாங்கி பார்த்தா ஏதோ ஒரு பொருள். அது என்ன உயிரினம் என்றே தெரியவில்லை ஏதோ இருக்கிறது. இதை நான் குடித்திருந்தால் என்னுடைய உடம்பு என்ன ஆயிருக்கும். இதனால் மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தமிழக அரசு முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். ஏற்கனவே இதுபோன்ற குளிர்பானம் குடித்து ஒரு குழந்தை இறந்திருக்கிறார். இதற்கெல்லாம் அமெரிக்கன் கம்பெனி பதில் சொல்லியாக வேண்டும். தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுத்தாக வேண்டும்'' என்றார்.