விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது கொணக்கம் பட்டு. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி செல்வி வயது 48. இவர் நேற்று (15.02.2021) மதியம் மகள் தீபாவுடன் வீட்டில் சமையல் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்து அவர்களின் வீட்டு முன்பு இறங்கிய 25 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், பார்ப்பதற்குப் பக்திமான் போன்று தோற்றம் தொடுத்துள்ளார். அவர் உங்கள் வீட்டில் யாரோ செய்வினை செய்திருக்கிறார்கள், அதனால் உங்கள் குடும்பத்தில் நிம்மதியற்று பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
அதனால் அந்த செய்வினை எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் உங்கள் இல்லத்தில் கெட்ட காரியம் நடைபெறும். இப்படிக் கூறி அந்தப் பெண்ணின் மனதைக் குழப்பியுள்ளார். அதோடு அதையெல்லாம் சரி செய்ய இந்த வீட்டில் பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண் நம்பும் விதத்தில் பல்வேறு காரணங்களையும் அடுக்கடுக்காகக் கூறியுள்ளார். அதை நம்பிய செல்வி, என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று அந்த மர்ம மனிதரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர் வீட்டில் இருக்கும் தங்க நகைகளைக் கொடுத்தால் அதை வைத்துப் பரிகாரம் செய்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.
அதை மீண்டும் வீட்டில் வைத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த செல்வியின் மகள் 20 வயது தீபா, தன் தாயாரிடம் இதையெல்லாம் நம்ப வேண்டாம் என்று கூறி தடுத்துள்ளார். தனது மகள் பேச்சையும் மீறி செல்வி அந்த மர்ம மனிதரிடம் வீட்டில் பீரோவில் வைத்திருந்த மோதிரம், 4 பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை எடுத்துவந்து கொடுத்துள்ளார். அதைக் கையில் வாங்கிய அந்த நபர், நான் இதை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் உள்ள கோயிலில் வைத்து பரிகாரம் செய்துவிட்டு, மீண்டும் எடுத்து வந்து தருகிறேன் என்றார். அதற்குள் உங்கள் வீடு வாசலைக் கழுவி சுத்தம் செய்து நீங்களும் குளித்துவிட்டுத் தயாராக இருங்கள் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
அப்படி சென்ற மனிதன் பல மணி நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த செல்வி, ஊரில் உள்ள கோயிலுக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு யாரும் இல்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வி இது சம்பந்தமாக ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் பில்லி, சூனியம் எடுக்கப் பரிகாரம் செய்யப் போவதாகக் கூறி நூதன முறையில் நகைகளைப் பெற்றுச் சென்ற அந்த மர்ம நபர் யாராக இருக்கும் என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். பில்லி, சூனியம், ஏவல், அதற்கான பரிகாரம் என்று கூறி மர்ம நபர் ஒருவர் பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.