சென்னையை உலுக்கிய மயிலாப்பூர் ஸ்ரீகாந்த், அனுராதா கொலை வழக்கில் அவரின் கார் ஓட்டுநர் கிருஷ்ணா என்பவரும், அவரது நண்பர் ரவியும் காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் மேல் விசாரணை நடத்த காவல்துறைக்கு ஐந்து நாள் அனுமதி அளித்துள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம்.
சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா ஆகியோர், மயிலாப்பூர் துவாரகா காலனியில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து ஸ்ரீகாந்தின் கார் ஓட்டுநர் கிருஷ்ணாவும், அவரது நண்பரும் மண்வெட்டி கட்டையால் தலையில் தாக்கியும், கழுத்தில் கத்தியால் குத்தியும் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்தனர். மேலும், அவர்களது வீட்டில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 1000 பவுன் தங்க, வைர நகைகள் மற்றும் 70 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ. 40 கோடி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. காவல்துறையினர் கொலை நடந்த ஆறு மணி நேரத்தில் கொலையாளிகள் இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில், கொலையாளிகளிடம் மேல் விசாரணை நடத்த அவர்களை காவலில் எடுக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், சைதாப்பேட்டை நீதிமன்றம் கொலையாளிகளை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.