சிதம்பரம் அருகே காட்டுகூடலூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது மனைவி தமிழரசி. கடந்த ஒரு மாதத்திற்கு முன் கோபாலகிருஷ்ணன் அவரது மனைவியை குடிபோதையில் காலில் வெட்டியுள்ளார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ததால் கோபாலகிருஷ்ணன் தண்டனை பெற்று தற்போது சிதம்பரம் கிளைசிறைச்சாலையில் உள்ளார்.
இந்த நிலையில் தமிழரசி இருகுழந்தைகளை அழைத்துக்கொண்டு கணவனை பார்க்க சிறைக்கு திங்கள் மதியம் வந்துள்ளார். அங்கிருந்த சிறைகண்காணிப்பாளர் பூவராகமூர்த்தி கணவரை பார்க்க வேண்டும் என்றால் ரூ100 கொடுத்துவிட்டு உள்ளேபோ என்று கூறியுள்ளார். பணம் கொடுப்பது எனக்கு தெரியாது நான் இவ்வளவு நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அப்போது குழந்தைகளை பார்த்து இதுகளை படுத்து பெத்துக்கதெரியுது. காசு கொடுக்கணும்னு தெரியாதா? என் ரூம் பிரியாதான் இருக்கு கொஞ்சம் படுத்துட்டு போ என்று அசிங்கமாக கூறியுள்ளார். அப்போது தமிழரசி இப்படியெல்லாம் பேசினிங்க என்றால் எங்க வக்கீலிடம் சொல்லுவேன் என்று கூறியுள்ளார். நீ போய் இதை வெளியில் சொன்னால் உன்புருஷன் இங்கதானே இருக்கான் அவன் கதி என்னவென்று நீயே பார்த்துக்கொள் என்று மீண்டும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் அழுதுகொண்டே சிறைக்கு பின்புறத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பார்திபனிடம் நடந்த சம்பவத்தை கூறி புகார் கொடுத்துள்ளார். அவரோ உடனே சம்பந்தபட்ட சிறை கண்காணிப்பாளரை அழைத்து விபரம் கேட்டுள்ளார். அப்போது நீதிபதி, குற்றவாளிகளை பார்க்க வந்தால் லஞ்சம் கேப்பீர்களோ?, மாலை 5 மணிக்கு மேல் வந்தால் 500 ரூ வசூல் செய்கிறீர்களாமே என்று கேட்க இதற்கு தலைகுனிந்து கொண்டார் பூவராக மூர்த்தி. மேலும் இது தொடர்பாக மாவட்ட மத்திய சிறைதுறை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி ஏப்ரல் 2- ந்தேதிக்குள் அறிக்கை சமர்பிக்கவேண்டும் என்று உத்திரவிட்டுள்ளார்.