பெரியார் பல்கலையின் நிர்வாக சீர்கேட்டை தட்டிக்கேட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி பேராசிரியரின் நிறைமாத கர்ப்பிணி மனைவி, கணவருக்கு நீதி வேண்டும் என்று கோரி, கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
சேலம், பெரியார் பல்கலையில் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் பிரேம்குமார் (32). கடந்த மார்ச் 1ம் தேதி நடக்க இருந்த சிண்டிகேட் கூட்டத்தில், குமாரதாஸ் என்ற பேராசிரியருக்கு மீள் பணியமர்த்தம் செய்வது தொடர்பான பொருள்நிரல் வைக்கப்பட்டு இருந்தது.
பேராசிரியர் குமாரதாஸ், நடப்புக்கல்வி ஆண்டில் ஜூன் மாதத்துடன் பணி நிறைவு பெறுகிறார். கல்வி ஆண்டுக்கு இடையில் பணி நிறைவு பெறும் பேராசிரியருக்கு மீள் பணியமர்த்தம் செய்யக்கூடாது என்று அரசாணை உள்ளது. அதை மேற்கோள்காட்டி, குமாரதாஸூக்கு மீள் பணியர்த்தம் தொடர்பான பொருள்நிரல் மீது விவாதம் நடத்தக்கூடாது என்று உயர்கல்வித்துறை செயலர், சட்டத்துறை செயலர் உள்ளிட்ட அரசுத்தரப்பு சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு உதவி பேராசிரியர் பிரேம்குமார் கடிதம் எழுதி இருந்தார்.
சிண்டிகேட் கூட்டம் நடப்பதற்கு முன்பே அதன் பொருள்நிரலை கசிய விட்டது என்பது பல்கலை சாசன விதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்று கூறி, பல்கலை நிர்வாகம் பிரேம்குமாரை கடந்த மார்ச் 5ம் தேதி அதிரடியாக பணியிடைநீக்கம் செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிரேம்குமாரின் மனு மீது உரிய பதில் அளிக்கும்படி பெரியார் பல்கலைக்கு உத்தரவிட்டது. எங்கே வழக்கு தங்களுக்கு எதிராக முடிந்து விடுமோ என்று கருதிய பல்கலை நிர்வாகம், பிரேம்குமாரை ஏதாவது ஒரு வலுவான புகாரில் சிக்க வைக்கும் நோக்கில், அவரிடம் எம்.ஏ., படித்து வரும் பட்டியலின மாணவி ஒருவரை தூண்டிவிட்டு, பிரேம்குமார் மீது பாலியல் புகார், சாதி வன்கொடுமை புகார் கொடுக்க வைத்திருக்கிறது.
அதன்பேரில் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பிரேம்குமார் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தப் புகாரைக்கூட அந்த மாணவி நேரில் கொடுக்கவில்லை. அவருடைய ஒப்புதலின்பேரில் பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் அளித்திருக்கிறார். இதையடுத்து, உதவி பேராசிரியர் பிரேம்குமார் தலைமறைவானார்.
பிரேம்குமாரின் மனைவி உமாமகேஸ்வரி (30). இவர்களுக்கு ஐந்து வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இன்னும் பதினைந்து நாள்களில் குழந்தை பிறக்க உள்ள நிலையில், கணவருக்கு எதிரான பெரியார் பல்கலையின் அடக்குமுறைகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் உமாமகேஸ்வரி, தன் கணவருக்கு நீதி வேண்டும் என்று, சமூக ஊடகங்கள் வாயிலாக கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருக்கிறார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, ''என் பெயர் உமா மகேஸ்வரி. என் கணவர் பெயர் பிரேம்குமார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாள்களாக அவரைப் பற்றி ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருக்கிறது.
பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்து, ஒரு ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக கேள்வி கேட்டார் என்பதற்காக அவரை பல்கலை நிர்வாகம், அடக்குமுறையுடன் பணியிடைநீக்கம் செய்திருக்கிறது. கடந்த மார்ச் 5ம் தேதி பணியிடைநீக்கம் செய்துள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து என் கணவர் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வர இருந்த நிலையில், அவரை பெரியார் பல்கலைக்கழகம் பழிவாங்கும் நோக்கத்தில், ஒரு மாணவியை தூண்டிவிட்டு, என் கணவருக்கு எதிராக சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பொய் புகார் அளித்துள்ளனர்.
பல்கலையின் முடிவை எதிர்த்து குரல் கொடுக்க வந்த மாணவர்களையும் பெரியார் பல்கலைக்கழகம் அடக்குமுறையுடன் நடத்துகிறது. என் கணவருக்கு ஆதரவாக இப்போது வரைக்கும் பல்கலையில் இருந்து ஒரு ஆசிரியர் கூட குரல் கொடுக்க முன்வராதது வருத்தமாக இருக்கிறது. தனி ஆளாக நீங்க மட்டும் எதுக்கு போராடிக்கிட்டு இருக்கீங்க? இன்னும் ரெண்டு மூணு வாரத்தில் எனக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண், இந்த நேரத்தில் தன் கணவர் பக்கத்தில் இருக்கத்தான் விரும்புவாள். இந்த நேரத்தில் என் கணவர் என் கூட இல்லாமல், ஐந்து வயது கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தடுமாறிக்கிட்டு இருக்கேன்.
என் கணவரை பழிவாங்கும் நோக்கத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட பொய்யான புகாரையும், சஸ்பெண்ட் நடவடிக்கையையும் ரத்து செய்ய வேண்டும். என் கணவருக்கு நீதி கிடைக்கணும். எனக்கு என்ன செய்யறதுனு தெரியல. நீங்கள் என் கோரிக்கைக்கு செவி சாய்ப்பீங்கனு நம்புகிறேன்,'' என்று கண்ணீர் மல்க இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உமாமகேஸ்வரியின் இந்த கண்ணீர் வீடியோ, வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.