தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை பாஜக என்ற வகையிலும், அரசியல் எதிரி திமுக என்ற வகையிலும் பேசி இருந்தார். மேலும், விஜய் தன்னுடைய உரையில் திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று கூறியிருந்தார்.
இதனை எதிர்த்து விஜய்க்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில் த.வெ.கவினரும், நா.த.கவினரும் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் திமுகவில் சிலரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்கது என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜய்யை போலவே நானும் சினிமாவில் உட்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்தேன். 2 மாபெரும் தலைவர்களை எதிர்த்து நின்றேன். உழைப்பும் உறுதியும் இருந்தால் எதுவும் சாத்தியம்.
நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் ஆளுநர் பதவி குறித்து புரிதல் இல்லாமல் விஜய் பேசி உள்ளார். புள்ளி விவரங்களை தெரிந்துகொண்டு விஜய் பேச வேண்டும். அம்பேத்கரைக் கொள்கை தலைவராக வைத்த விஜய் அரசியல் சாசனத்தில் உள்ள ஆளுநர் பதவியை எப்படி வேண்டாம் என சொல்கிறார்? விஜய் வீட்டில் எல்லோரும் இந்தி பேசுகிறார்கள். விஜய் இந்தி படிக்க வேண்டாம், மும்மொழிக் கொள்கை வேண்டாம் என எப்படி சொல்ல முடியும்? யாரும் சொல்லாத விஷயத்தை விஜய் அழுத்தமாக சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.