2014 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அங்கீகரிக்கப்படாத ஒரு கிராமம் உள்ளதை கண்டுபிடித்து வெளி உலகுக்கு கொண்டு வந்தது நக்கீரன்.. ஆம் ஓட்டு வாங்க மட்டும் செல்லும் அரசியல்வாதிகள் அதன் பிறகு அந்த கிராமத்திற்கு சாலை இல்லை என்று போவதில்லை. அப்படி ஒரு கிராமம் இருப்பதை 5 ஆண்டுகளுக்கு மறந்துவிடுவார்கள். அப்படித்தான் 2014ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த சுப்பிரமணியனும் முத்தன்பள்ளமா? என்று எதிர் கேள்வி கேட்டார். அப்படித்தான் அந்த முத்தன்பள்ளம் கிராமத்தை நக்கீரன் வெளியே கொண்டுவந்தது.
![no way to get relief](http://image.nakkheeran.in/cdn/farfuture/T7200PTHn5CfVz4j_IPvT1e-A97c6psGA4vAti6oMCA/1543080628/sites/default/files/inline-images/ZZZ_1.jpg)
அதன்பிறகு அக்டோபரில் அப்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மனோகரன் முத்தன்பள்ளம் கிராமத்திற்கு 3 கி.மீ. நடந்து சென்று அந்த கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்த பிறகு அருகில் இருந்த அதிகாரிகளிடம் உடனே இந்த ஊருக்கு வேண்டிய சாலை வசதிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன் பிறகு அவரும் மாற்றலாகி போனார். அதன் பிறகு ஆட்சியராக வந்த கணேஷ் அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. அதனால் இன்று கஜாவின் பாதிப்பில் அங்கே ஒரு கிராமம் இருப்பதையே மாவட்ட நிர்வாகம் மறந்துவிட்டது.
![no way to get relief](http://image.nakkheeran.in/cdn/farfuture/ty-4Z7hbFW7_gaLxOHp8tyOQ6Blb3w1JKdXYM0Pu6xE/1543080652/sites/default/files/inline-images/muthanpallam%202014.%201_0.jpg)
2014ஆம் ஆண்டு நாம் பார்த்த முத்தன்பள்ளம் கஜாவுக்கு பிறகு எப்படி உள்ளது என்பதை காண சென்றால்.. அப்போதைய சாலையைவிட மோசமான ஒத்தையடிப் பாதை.. 3 கி.மீ நடைதான். ஒரு மூதாட்டிக்கு உடல்நலமில்லை என்று கட்டிலில் தூக்கிக் கொண்டு பிரதானச் சாலைக்கு வந்தார்கள் இளைஞர்கள்.
![no way to get relief](http://image.nakkheeran.in/cdn/farfuture/tTYBdPuo-L5N4lQt7FdTXOwYVMeX-O42gx1mOZ5tGFY/1543080680/sites/default/files/inline-images/2018%20kaja.%2010_0.jpg)
முன்பு ஒரு ஓட்டு வீடு இருந்த அந்த கிராமத்தில் தற்போது 2 ஓட்டு வீடுகள் மட்டும் மற்ற அனைத்து பழமை மாறாத ஓலைக் கூரைவீடுகள்தான். அத்தனை வீடுகளும் சிதைந்து காணப்பட்டது. மண் சுவர்கள் இடிந்து விழும் நிலை. புயல் வரும் போது எப்படி இருந்தீர்கள்..? என்ற நமது கேள்விக்கு. இந்த வீட்டில் தான் இருந்தோம். கூரைகள் பிச்சு போச்சு.. மழையும் கொட்டுது, கொஞ்சம் கொஞ்சமா இந்த ஓட்டு வீட்டுக்குள்ள வந்தோம். அந்த வீட்லயும் சேதம்.
![no way to get relief](http://image.nakkheeran.in/cdn/farfuture/WwG2ktMXFO4qJRWUt-dweMUS_ykVQSqbJxIEQ4skjw4/1543080702/sites/default/files/inline-images/2018%20road_0.jpg)
இதுவரை எங்களை பார்க்க ஒரு நாதி வரல. முத்தன்பள்ளம் மக்கள் இருக்காங்களா? செத்தாங்களான்னு பார்க்ககூட யாரும் வரல. ஆடு, மாடுகளும் சேதாரம்தான். இப்ப நாங்க மறுபடியும் பழைய நிலைக்கு வரனும்னா பல வருசம் உழைக்கனும். எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் எங்க ஊரை கேள்விப்பட்டு நிவாரணம் கொண்டு வந்து கொடுத்தாங்க. உணவு, உடை, தீ பெட்டி என்று வந்துள்ளது. அவங்களுக்காவது எங்க ஊருப் பக்கம் பார்வைபட்டதே என்றனர்.
![no way to get relief](http://image.nakkheeran.in/cdn/farfuture/vG5cn7FVyefEpYsa7hfTCOGd10YeJl0hE5KbwH0RgZg/1543080722/sites/default/files/inline-images/2018%20kaja.%20muthanpallam.%201_0.jpg)
முன்னாள் ஆட்சியர் போட்ட உத்தரவை இனியாவது இப்போதைய மாவட்ட ஆட்சியர் நிறைவேற்றுவாரா? அந்த கிராமத்துக்கு சாலை வசதி கிடைக்குமா? சாலை வசதி இருந்தால்தான் அந்த கிராமத்தை அரசியல்வாதிகள் கூட கண்டுகொள்வார்கள்.