Skip to main content

முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும்; எஸ்.டி.பி.ஐ

Published on 23/08/2017 | Edited on 23/08/2017
முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும்; எஸ்.டி.பி.ஐ.

முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

முத்தலாக் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் குறித்து நாடாளுமன்றம் ஆறு மாதத்துக்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அதுவரையில் முத்தலாக் முறைக்கு தடை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றும் படி அளித்திருக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பானது, தீர்வை நோக்கி நகர்வதற்குப் பதிலாக, குழப்பத்தை ஏற்படுத்தவே வழிவகுக்கும். மேலும், அந்த உத்தரவு பாஜகவின் கொள்கை திட்டமான பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வழிவகுத்து விடுமோ என்ற அச்சத்தை முஸ்லிம்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது ஒரே நேரத்தில் மூன்று தடவை தலாக் சொல்லும் முறைக்கு எதிராக முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கடுமையான பல்வேறு நடைமுறைகளை மேற்கொண்டுவருவதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த பின்னரும், அதனை கருத்தில் கொள்ளாமல் 6 மாத காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற உத்தரவிட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

அதேவேளையில், விசாரணையின் போது முஸ்லிம்களின் ஒட்டுமொத்த தலாக் நடைமுறையையே ரத்து செய்ய வேண்டும், பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் போன்ற மத்திய பாஜக அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மேலும், மத அடிப்படையிலான தனியார் சட்டங்கள் அரசியல் அமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உரிமை என்பதையும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதிபடுத்தியிருப்பதையும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது.

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதல், அரசியல் அமைப்புச் சட்டம் அளித்திருக்கும் மத அடிப்படையிலான தனியார் சட்ட உரிமைகளுக்கு தடை ஏற்படுத்தி, நாடு முழுவதும் பொதுசிவில் சட்டம் கொண்டுவர முயற்சித்து வருகின்றது. அதற்காக முத்தலாக் முறையை வாய்ப்பாக பயன்படுத்தி, சர்ச்சைகளை உருவாக்கி, அதற்கான களத்தை அமைக்க முயற்சித்து வருகின்றது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மோடி அரசு கொண்டுவர துடிக்கும் பொதுசிவில் சட்டத்திற்கு நல்வாய்ப்பாக அமைந்துவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

முத்தலாக் விவகாரத்தில் முஸ்லிம் தனியார் சட்டவாரியம் அளித்த பிரமாணபத்திர பிரகாரம் சில வழிகாட்டுதல்களை தெரிவித்து, பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டிய உச்சநீதிமன்றம், முஸ்லிம்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் பாஜக அரசிடம் சட்டம் இயற்றச் சொல்லி உத்தரவிட்டிருப்பது மென்மேலும் குழப்பங்களை உருவாக்கவே வழிவகுக்கும்.

இந்த தீர்ப்பை தவறாக பயன்படுத்தி முஸ்லிம்களின் தனியார் ஷரீஅத் சட்டத்தில் குறுக்கீடு செய்து, பொது சிவில் சட்டத்தை புறவாசல் வழியாக கொண்டுவர முயற்சிக்கக் கூடாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் மத சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் நீதிமன்ற தீர்ப்புகள், நாடாளுமன்ற தலையீடுகள் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்