Skip to main content

மணல் கொள்ளைக்கு முடிவு கட்டாவிடில் விவசாயம் அழியும்! ராமதாஸ்

Published on 18/08/2018 | Edited on 18/08/2018
m

 

வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டும்  கால்வாய்கள் மூலம் நிலங்களுக்கு தண்ணீர் சென்றடையாததற்கு மணல் கொள்ளை தான் காரணமாகும் என்கிறார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்.  இது குறித்த அவரது அறிக்கை : 

’’மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை. இதற்குக் காரணம் இயற்கை அல்ல... மணல் கொள்ளை எனும் மனிதர்களின் பேராசை என்பது தான் மனதை உலுக்கும் உண்மை ஆகும்.

 

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த மாதம் 19-ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும் நிலையில் இப்போது தான் திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையத் தொடங்கியுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட 10 நாட்களில் கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடைந்திருக்க வேண்டிய தண்ணீர் ஒரு மாதத்திற்கு பிறகு செல்வதற்குக் காரணம் காவிரியின் கிளை ஆறுகளும், பாசனக் கால்வாய்களும் முறையாகத் தூர்வாரப்படாதது தான். இவற்றை விளக்கி கடந்த 1-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

 

நாகை, திருவாரூர் மாவட்டங்களின் கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையத்  தொடங்கியுள்ள நிலையில், கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை. கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டத்தில் உள்ள விளைநிலங்களுக்கு  வாங்கல் நெரூர் ராஜ வாய்க்கால், பாப்புலர் முதலியார் வாய்க்கால் உள்ளிட்ட கால்வாய்கள் மூலமாக  காவிரி நீர் செல்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, காவிரியில் வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் வந்தாலே  இந்த கால்வாய்கள் மூலம் விவசாயத்திற்கு தாராளமாக தண்ணீர் கிடைத்து வந்த நிலையில் இப்போது வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டும்  கால்வாய்கள் மூலம் நிலங்களுக்கு தண்ணீர் சென்றடையாததற்கு மணல் கொள்ளை தான் காரணமாகும்.

 

கரூர் மாவட்டம் மணல் கொள்ளையர்களின் வேட்டைக்காடாக திகழ்கிறது. 3 அடி ஆழத்திற்கும் மேல் மணல் அள்ளக்கூடாது என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் 30 அடி முதல் 40 அடி ஆழத்திற்கு காவிரி ஆற்றில் மணல் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் காவிரியில்  எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் அது கால்வாய்கள் அமைந்துள்ள உயரத்தை எட்ட முடிவதில்லை என்பதால் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்ல வாய்ப்பில்லை. கடந்த காலங்களில் ஆற்றின் குறுக்கே தற்காலிக தடுப்பணைகளை அமைத்து தண்ணீரைத் தேக்கி கால்வாய்கள் மூலம் விளைநிலங்களுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் அந்த ஏற்பாடும் செய்யப்படாததால் விவசாயம் பாதிக்கப் பட்டுள்ளது. பல்லாயிரம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள் விவசாயம் செய்யப்படாமல் காய்ந்து கிடக்கின்றன.

 

பாசனக் கால்வாய்களை ஆழப்படுத்தினால் அவற்றில் தண்ணீர் பாய வாய்ப்புள்ளது. ஆனால், பாசனக் கால்வாய்களை ஆழப்படுத்தும் போது விளைநிலங்களை விட தாழ்ந்து விடும் என்பதால், அப்போதும் பாசனக் கால்வாய்களில் இருந்து நிலங்களுக்கு தண்ணீர் பாயாது. எனவே கால்வாய்களை ஆழப் படுத்துவதால் எந்த பயனும் இல்லை. மாறாக, கரூர் மாவட்டத்தில் மணல் எடுக்கத் தடை விதிப்பதுடன்,   தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைத் தேக்குவதன் மூலமாக மட்டுமே பாசனக் கால்வாய்கள் மூலம்  நிலங்களுக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். இச்சிக்கலுக்கு இதுதான் சாத்தியமான தீர்வாகும்.

 

கரூர் மாவட்டத்தில் மட்டும் தான் இந்த நிலை என்று கூற முடியாது. காவிரியிலும், கொள்ளிடத்திலும் மணல் கொள்ளை நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் ஆறுகளில் மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.   அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளும் மூடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டுக்கு மேலாகியும், இதுவரை ஒரு குவாரி கூட மூடப்படவில்லை. மாறாக புதிய குவாரிகள் தான் திறக்கப்பட்டு வருகின்றன. இது அநீதி.

 

காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்தைக் காக்க வேண்டுமானால் காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும். அத்துடன் இரு ஆறுகளிலும் வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணைகளைக் கட்டி விவசாயத்தை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்.’’


 

சார்ந்த செய்திகள்